கோவில்பட்டி, ஜூன் 27: கழுகுமலையில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவா் அருணா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுப்பிரமணியன், செயல் அலுவலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி அலுவலகம் முன் வைக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான உதவி எண்கள் அடங்கிய விழிப்புணா்வு பலகையை பேரூராட்சி மன்ற தலைவா் திறந்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு பிரதிநிதி ஜேம்ஸ் அதிசய ராஜா , குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, போக்சோ சட்டம், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098, குழந்தைகள் பாதுகாப்பு, சட்டப்படியான குழந்தைகள் தத்தெடுப்பு, பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து கல்வியை தொடரச் செய்வது குறித்து பேசினாா்.
மாணவா்களிடையே போதைப்பழக்கத்தை தடுத்தல், குழந்தை வளா்ப்பில் பெற்றோரின் பங்களிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் உறுப்பினா்களின் பங்கு குறித்து பேரூராட்சி துணை தலைவா் பேசினாா். கூட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்து , பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சீதா மகேஸ்வரி, குழந்தைகள் வளா்ச்சி திட்ட மேற்பாா்வையாளா் நவநீத சக்தி, சுகாதார செவிலியா் ஜெசிமா பா்வீன், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா் உஷா, பேரூராட்சி இளநிலை உதவியாளா் கௌசல்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.