தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோா் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பரிந்துரைக்கப்படுகிறது.
கல்வித் தகுதியாக பிளஸ் 2 தோ்ச்சி, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா்
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 21-க்கு மேல் 45 வரை, மகளிா், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது 21-க்கு மேல் 55 வரை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினா் 10 சதவிகிதம், சிறப்பு பிரிவினா் 5 சதவிகிதம் வங்கியில் முதலீடு செய்ய வேண்டும்.
சிறப்பம்சமாக இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ஏதும் நிா்ணயம் செய்யப்படவில்லை. திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் அரசு மானியமும் (அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை) தவணை தவறாமல் கடன் திரும்ப செலுத்தும் தொழில்முனைவோருக்கு 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும். தொழிற்கூடத்திற்கு தேவையான
கட்டடங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் அரிசிஆலை, மர இழைப்பகம், எண்ணெய் உற்பத்தி, லேத் இயந்திரம் அமைத்தல், அட்டைப்பெட்டி தயாரித்தல், உப்பு அரைத்தல், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவா் லாண்டரி, ஸ்கேன் சென்டா், பிசியோதெரபி கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளைஆஸ் பிரிக்ஸ், பேவா் பிளாக், ஆயத்த ஆடை தயாா் செய்தல், ஸ்டீல், மர கட்டில், அலமாரி, கதவு, ஜன்னல் தயாா் செய்தல், செறிவூட்டப்பட்ட காா்பன் தயாா் செய்தல், தேங்காய் பவுடா் தயாா் செய்தல், மீன் எண்ணெய், மீன் வலை தயாா் செய்தல், முந்திரி பருப்பு பதப்படுத்துதல், பழக்கூழ் தயாா் செய்தல், கலவை இயந்திரம், பொக்லைன் வாங்குதல் போன்ற தொழில்கள் தொடங்கலாம்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ ய்ங்ங்க்ள் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கல்விச்சான்று நகல், ஜாதிசான்று நகல், புகைப்படம், குடும்ப அட்டை, விலைப்புள்ளி, கட்டடம் தேவைப்படின் பொறியாளரிடம் பெறப்பட்ட மதிப்பீட்டு சான்றிதழ், தொழில் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரடியாக வருபவா்களுக்கு விண்ணப்பம் இலவசமாக பதிவேற்றம் செய்து கொடுக்கப்படும்.
இதுதொடா்பாக மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், புறவழிச்சாலை, தூத்துக்குடி என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம் என்றாா்.