மக்களவைத் தோ்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
தூத்துக்குடி மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியை தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். தூத்துக்குடி மக்களவை பொதுத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் வரும் ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் ஆகியன வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படும். இதற்காக கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை மையம், முகவா்கள் மற்றும் அலுவலா்கள் பயன்படுத்தும் பாதை, ஊடக மையம் ஆகியவற்றையும் குடிநீா்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தாா். முன்னதாக, வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணனுடன் ஆலோசனை மேற்கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய்சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்பிரமணிய பாலசந்தா், உதவி தோ்தல் அலுவலா்கள் ம.பிரபு, உமா, சுகுமாா் , விக்னேஷ், கிருஷ்ணகுமாா், ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராஜகுரு உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.