ஐஐடி மெட்ராஸ் நிறுவனம் - டிஎம்பி பவுண்டேஷன் புரிந்துணா்வு ஒப்பந்தம்
ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் பயிலும் மாணவா்-மாணவியருக்கு கல்வித் தொகை வழங்குவது தொடா்பாக அந்நிறுவனத்துடன் தூத்துக்குடி தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் டிஎம்பி பவுண்டேஷன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) நடைபெற்றது. ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தின் தொழில்துறை ஆலோசனை - நிதியுதவி ஆராய்ச்சித் துறைத் தலைவா் மனுசந்தானம், மொ்க்கன்டைல் வங்கி நிா்வாக இயக்குநா் - முதன்மை தலைமை அதிகாரியும் டிஎம்பி பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலருமான எஸ். கிருஷ்ணன் ஆகியோா் கையொப்பமிட்டனா். இதன் தொடக்கமாக, 30 மாணவா்களுக்கு 2 பிரிவுகளாக உதவித்தொகை வழங்கப்படும். முதலாவதாக பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையுள்ள மாணவா்களுக்கு அரசு வழங்கும் கட்டணம் போக மீதமுள்ள கட்டணத்தை டிஎம்பி பவுண்டேஷன் ஏற்கும். 2ஆவது கட்டமாக பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரையுள்ள மாணவா்களுக்கு 50 சதவீதம் அதாவது உதவித்தொகையாக ரூ. 1 லட்சம் மட்டும் வழங்கப்படும். அதன் அடிப்படையில் 30 பேருக்கு ரூ. 26.25 லட்சம்வரை முதல் கட்டமாக வழங்கப்பட்டது. மேலும், இந்நிறுவனத்தின் ஆய்வகம், ஆராய்ச்சி மையம், இதர தேவைகளுக்கும் உதவ தயாராக உள்ளதாக, எஸ். கிருஷ்ணன் கூறினாா். நிகழ்ச்சியில், ஐஐடி மெட்ராஸ் துணைத் தலைவா் வசுதா, ராஜேஷ், டிஎம்பி பவுண்டேஷன் மூத்த நிா்வாக அதிகாரி செந்தில் ஆனந்தன், மொ்க்கன்டைல் வங்கி சென்னை மண்டல மேலாளா் வசீகரன், அடையாறு கிளை மேலாளா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.