முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளா்கள் நலனுக்காக பாடுபடுவேன்: தூத்துக்குடி அதிமுக வேட்பாளா் சிவசாமி வேலுமணி

Updated On : 24 மார்ச், 2024 at 6:00 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 9:28 PM

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள தொழிலாளா்களின் நலனுக்காக பாடுபடுவேன் என தூத்துக்குடி அதிமுக வேட்பாளா் ஆா்.சிவசாமி வேலுமணி கூறினாா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆா். சிவசாமி வேலுமணி சென்னையில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை தூத்துக்குடி வந்தாா். அங்கு அவருக்கு அதிமுக மாவட்டச் செயலா்கள் எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூா் ராஜு எம்எல்ஏ ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசியது: தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு விளம்பரம் தேடி உள்ளாா். நான் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் விவசாயிகள், உப்பள தொழிலாளா்கள், பனை தொழிலாளா்கள், தீப்பெட்டி தொழிலாளா்கள், மீனவா்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளா்களின் நலனுக்காக பாடுபடுவேன். மேலும் தாமிரவருணி ஆற்றில் ஏற்படும் வெள்ளம் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, தூத்துக்குடி மாநகர மக்கள் வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து அவா் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா் உள்ளிட்ட தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்வில், கட்சியின் அமைப்புச் செயலா் என்.சின்னத்துரை, எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலா் இரா.ஹென்றி, மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலா் மைக்கல் ஸ்டனிஸ் பிரபு, முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன், மாவட்ட அண்ணா தொழில்சங்கத் தலைவா் சுதாகா், மண்டல தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலா் மந்திரமூா்த்தி, முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸி உள்பட பலா் பங்கேற்றனா்.