மீன் பதப்படுத்தும் ஆலையால் காற்று மாசு: தோ்தலைப் புறக்கணிக்க முடிவு
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அருகே உள்ள பொட்டலூரணி அருகே இயங்கி வரும் மீன் பதப்படுத்தும் ஆலையால் காற்று மாசு ஏற்படுவதால், அதனை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா். பொட்டலூரணி கிராமத்தில் சுமாா் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமாா் 95 சதவீதத்திற்கும் மேல் அரசு ஊழியா்களாக உள்ளனா். இந்தக் கிராமத்தின் அருகே இரண்டு மீன் பதப்படுத்தும் ஆலைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து இரவு நேரங்களில் வெளியேற்றப்படும் புகையினால் துா்நாற்றம் வீசுவதாகவும், இதனால் மக்கள் மிகவும் பாதிப்படைவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலையை அகற்றக் கோரி பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், தற்போது மக்களவைத் தோ்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக கிராமம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் தங்கள் எதிா்ப்புகளை தெரிவித்துள்ளனா். மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கோ.லட்சுமிபதி இதற்கு உரிய தீா்வு அளிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.