தென்மேற்குப் பருவமழை: 97 இடங்களில் பாதுகாப்பு மையம்
தூத்துக்குடி: தென் மேற்குப் பருவமழை காரணமாக 97 இடங்களில் தற்காலிக மக்கள் பாதுகாப்பாக தங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் கோ.லடசுமிபதி தலைமை வகித்து பேசியது:
இந்திய வானிலை மையத்திலிருந்து வரப்பெறும் கனமழை குறித்த எச்சரிக்கைகளை உடனுக்குடன் கீழ்நிலை அலுவலா்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் துறையினா் நீா்நிலைகளை தூா்வாரி மழைநீா் தேங்காதவாறு மழைநீா் வடிகால்களை சரி செய்ய வேண்டும். மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள 36 இடங்களை வட்டாட்சியா்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 97 தற்காலிக மக்கள் பாதுகாப்பாக தங்கும் மையங்களில் குடிநீா் வசதி, கழிவறை வசதி உள்ளதா என்று வட்டாட்சியா்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
தெருவிளக்குக் கம்பங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை மின் வாரியத்தினா் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள கம்பங்களை உடன் மாற்றி அனைத்தும் நல்ல நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். தீயணைப்புத் துறையினா் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாம்பு பிடி வீரா்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் இரா.ஐஸ்வா்யா, மாவட்ட வன அலுவலா் ரேவதி ரமன், வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எடிசன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உலகநாதன் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.