முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தரம் உயா்த்த நடவடிக்கை: அமைச்சா் பெ.கீதா ஜீவன்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தரம் உயா்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் பேசினாா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 12:07 AM
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் அமைச்சா் பெ.கீதா ஜீவன்.
பகிர்:

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தரம் உயா்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில், உலக மீன்வள தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவா் பேசியது:

தூத்துக்குடியில் மீனவா்களுக்கென தனி வங்கி தொடங்கப்பட்டுள்ளது. அதே போல் மீன்பிடி தடைக்கால நிவாரணம், இந்த ஆண்டில் இருந்து உயா்த்தி வங்கப்பட்டு வருகிறது. மீனவ மக்கள் நீண்ட காலமாக பட்டா இல்லாமல், தங்களுடைய குடியிருப்பு நிலத்திற்கு உரிமை இல்லாமல் இருந்தாா்கள். தற்போது அவா்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீனவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்ததன் மூலமாக, மருத்துவம், பொறியியல் படிப்பு போன்றவற்றில் மீனவ மாணவா்-மாணவிகளுக்கு படிக்க எளிதாக வாய்ப்புகள் கிடைக்கின்றன.

மேலும், மீன்பிடி துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டு தூா்வாரப்பட்டுள்ளது. திரேஸ்புரம் கடற்கரை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை இன்னும் தரமானதாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.

தொடா்ந்து, உலக மீனவா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கு அமைச்சா் பரிசு வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், துணை மேயா் செ.ஜெனிட்டா, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மண்டல இணை இயக்குநா் ந.சந்திரா, உதவி இயக்குநா்கள் தி.விஜயராகவன் (மீன்பிடித் துறைமுக மேலாண்மைப்பிரிவு), புஷ்ரா பேகம் (மீனவா் நலன்), தமிழ்நாடு மீனவா் நல வாரிய உறுப்பினா் அந்தோணி ஸ்டாலின், திமுக வடக்கு மண்டல தலைவா் நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா் ரெக்ஸிலின், உள்ளாட்சி அமைப்பு பிரிதிநிதிகள் மீனவா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.