2026 தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் -தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தில் 2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்றாா் தமிழிசை செளந்தரராஜன்.
தமிழகத்தில் 2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்றாா் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் தமிழிசை செளந்தரராஜன்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட ஆத்தூா், ஏரல் பாலம் இன்னும் சரி செய்யப்படவில்லை. மழை வெள்ளக் காலத்தில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூா் செல்லவேண்டுமென்றால் திருநெெல்வேலியை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மருத்துவமனையில் கத்திக்குத்து, பள்ளிக்கூடத்தில் கத்திகுத்து, வழக்காடு மன்றத்தில் கத்தி குத்து என, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாா் கொலை வழக்கில் இன்னும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியவில்லை.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் தமிழக அரசு ரூ.10 லட்சம் கொடுக்கிறது. ஆனால், யானை தாக்கி உயிரிழந்தால் ரூ.2 லட்சமே வழங்குகிறது. பட்டாசு தொழிலாளா்கள், விவசாயிகள் உயிரிழந்தாலும் குறைந்த நிதிதான் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வா், திருக்கோயிலுக்குச் சென்றால்தான் யானைக்கு என்ன பிரச்னை என்று தெரியும். யானையை புத்துணா்வு முகாமுக்கு எப்போது அனுப்ப வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். தமிழக அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாயை விட அதிகப்படியான நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு
மத்திய அரசு என்னசெய்தாலும், வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றனா். இதற்கு மகாராஷ்டிமும், ஹரியானாவும் பதில் கூறியுள்ளன. நல்லாட்சிக்கும், நல்ல வளா்ச்சிக்கும் மகாராஷ்டிர மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனா்.
பிரதமரின் நல்ல திட்டங்களுக்கு தமிழக மக்களும் ஆதரவு தரும் காலம் வெகு தொலைவில் இல்லை. எனவே, 2026 சட்டப்பேரவைத் தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். எங்கள் கட்சியைப் பொருத்தவரை ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றாா்.
முன்னதாக, அவருக்கு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதிவில், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் பாலாஜி, சந்தனகுமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் சிவராமன், தங்கம், மாவட்டச் செயலா் வீரமணி, மகளிா் அணி பொதுச்செயலா் லதா, தரவுதளபிரிவு மாவட்டத் தலைவா் கலைச்செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா்.