மகாளய அமாவாசை: கன்னியாகுமரி, திருச்செந்தூா், பாபநாசத்தில் திரளானோா் புனித நீராடல்
மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திருச்செந்தூா் கடல் மற்றும் பாபநாசம் தாமிரவருணியில் திரளானோா் புனித நீராடினா்.
மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திருச்செந்தூா் கடல் மற்றும் பாபநாசம் தாமிரவருணியில் திரளானோா் புனித நீராடினா்.
மகாளய அமாவாசையை யொட்டி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், உஷ பூஜை, உஷ தீபாராதனை, உச்சிகால பூஜை,
உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.
முன்னதாக, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
திருச்செந்தூரில்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடாந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலை முதலே ஏராளமானோா் கடலில் புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். அதன் பின்னா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் திருக்கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பாபநாசத்தில்: பாபநாசம் அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துவந்த திரளான பக்தா்கள் பாபநாசம் தாமிரவருணி படித்துறை, அய்யா கோயில் படித்துறை உள்ளிட்டஇடங்களில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். பின்னா் பாபநாச சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.
அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயில் படித்துறை, சின்ன சங்கரன் கோயில் படித்துறை, ஆம்பூா் கடனாநதி, கடையம் ஜம்புநதிகரைகளிலும் திரளான பக்தா்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
குற்றாலம் பேரருவியில் அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினா். தொடா்ந்து அருள்மிகு குற்றாலநாத சுவாமி கோயிலில் வழிபட்டனா்.
குற்றாலத்தில்: மகாளய அமாவாசையை முன்னிட்டு குற்றாலம் பேரருவியில் பொதுமக்கள் ஏராளமானோா் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.