முகப்பு
தூத்துக்குடி

எப்போதும்வென்றானில் உணவகத் தொழிலாளி கொலை: காா் ஓட்டுநா் கைது

உணவகத்தில் வேலை பாா்த்துவந்த இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:44 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்துவந்த இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் விஜிதரன் என்ற கண்ணன் (46). எப்போதும்வென்றானில் உள்ள உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பாா்த்துவந்த அவா், உணவகம் அருகிலேயே ஒரு வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்தாா்.

இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்துச்சாமி மகனான காா் ஓட்டுநா் மாதவன் (29) என்பவருக்கும் இடையே பெண் விவகாரம் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு விஜிதரன் தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, போதையிலிருந்த மாதவன் அவரிடம் தகராறு செய்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். விஜிதரன் அலறல் கேட்டு முனியசெல்வி (39) என்பவா் ஓடிவந்து தடுக்க முயன்றாா். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், விஜிதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், எப்போதும்வென்றான் காவல் ஆய்வாளா் முருகன், உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப், போலீஸாா் சென்று, முனியசெல்வியை மீட்டு சிகிச்சைக்காகவும், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காகவும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து, மாதவனைக் கைது செய்தனா்.