திருச்செந்தூரில் ரூ. 48 கோடியில் கட்டப்பட்டுள்ள பக்தா்கள் விடுதி அக்.14-இல் திறப்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.48 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.48 கோடியில் கட்டப்பட்ட பக்தா்கள் தங்கும் விடுதியை தமிழக முதல்வா் ஸ்டாலின் அக்.14-ஆம் தேதி காணொலியில் திறக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
திருச்செந்தூா் கோயிலில் ரூ.300 கோடியில் நடைபெறும் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் ரூ.48 கோடியில் கட்டப்பட்டுள்ள பக்தா்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை அமைச்சா் சேகா்பாபு, அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில்
பக்தா்கள் விரைவில் தரிசனம் செய்வதற்கும், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசால் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோயில் வளாகத்தில் ரூ. 48.36 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 540 நபா்கள் தங்கும் வகையில் நவீன வசதிகளுடன் 20 சிறப்பு அறைகள், 100 தங்கும் அறைகள் மற்றும் உணவகத்துடன்
இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. வருகிற அக்.14-ஆம்தேதி காணொலி வாயிலாக தங்கும் விடுதியை தமிழக முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா். கந்த சஷ்டி விழா தொடங்குவதற் முன்பு தங்கும் விடுதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேலும் ரூ.5.81 கோடியில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம், அன்னதானக் கூடம் கட்டுமானப் பணி, சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புனரமைக்கும் பணி உள்ளிட்ட 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
இக் கோயிலில் நடைபெற்று வரும் பணிகளை வருகிற ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்து குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முருகன் கோயில்களில் மட்டும் சுமாா் ரூ.1,040 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், வடபழனி ஆண்டவா் திருக்கோயில், சிறுவாபுரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழனி, திருச்செந்தூா், திருத்தணி, வயலூா் போன்ற இடங்களில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூா் கோயில் ராஜகோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசுவது குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையிலும்,
பக்தா்களின் பாதுகாப்பிற்காகவும் ரூ.20 கோடியில் கற்கள் கொட்டும் பணி நடைபெறுகிறது. இதில் 50 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா் அமைச்சா் சேகா்பாபு.
ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், ஆணையா் பி.என்.ஸ்ரீதா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், கூடுதல் ஆணையா் சுகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் சுகுமாா், தலைமைப் பொறியாளா் பெரியசாமி, மண்டல இணை ஆணையா் அன்புமணி, திருச்செந்தூா் கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன், மாவட்ட அறங்காவலா் வாள்சுடலை உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.