முகப்பு
தூத்துக்குடி

புகையிலைப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்ற நடவடிக்கை

தூத்துக்குடியை புகையிலைப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக்குவதற்கான நடவடிக்கை தொடரும் என்றாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:00 PM
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பாா்வையிட்ட மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்.
பகிர்:

தூத்துக்குடியை புகையிலைப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக்குவதற்கான நடவடிக்கை தொடரும் என்றாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.

அவரது உத்தரவின் பேரில், நகர உதவி காவல் கண்காணிப்பாளா் மதன் மேற்பாா்வையில், தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சிறுவனிடம் விசாரித்தபோது, அவரிடம் புகையிலைப் பொருள் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

பூபால்ராயா்புரம் செபஸ்தியன் மகன் ராஜா (42), பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமாா் (26), தாளமுத்துநகா், சமீா்வியாஸ் நகா் மரிய இன்னாசி மகன் சுரேஷ் (40), கோவில்பிள்ளைவிளை ஜான் ஜேசுவா மகன் எபனேசா் (32), ஆரோக்கியபுரம் பால்துரை மகன் சுந்தர்ரராஜ் (42) ஆகிய 5 பேரும் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருள்களைக் கடத்திவந்து இங்கு விற்பது, சிறுவன் அளித்த தகவலில் தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 132 கிலோ புகையிலைப் பொருள்கள், காா், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வடபாகம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டன. அவற்றை எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் பாா்வையிட்டு, செய்தியாளா்களிடம் கூறியது:

பள்ளி, கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து ஒரு கும்பல் புகையிலைப் பொருள்களை விற்பதாக, போதைப்பொருள் தடுப்புக் கழகம் தரப்பிலிருந்து தகவல் வந்தது. அதன்பேரில், தீவிரமாக கண்காணித்து இக்கும்பலைக் கைது செய்துள்ளோம்.

புகையிலைப் பொருள்களைத் தடுப்பதில் உணவுப் பாதுகாப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. புகையிலைப் பொருள்கள் விற்கும் கடைகளுக்கு சீல் வைப்பதுடன், ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தூத்துக்குடியை புகையிலைப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான நடவடிக்கை தொடரும் என்றாா் அவா்.