தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை, நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்கள் விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என, ஆட்சியா் க. இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
புகையிலை, நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பல துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:
உணவு வணிக நிறுவனங்கள், உணவு வணிகமல்லாத இதர நிறுவனங்கள் ஆகியவற்றில் காவல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தனிப்பட்ட ஆய்வு அல்லது கூட்டாய்வு செய்யப்படும். அப்போது, புகையிலை, நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் குற்றத்தின் தன்மை, வணிக வகைக்கேற்ப மாவட்ட நியமன அலுவலா் அல்லது மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரால் அபராதம் விதித்து உத்தரவிட்ட பின்னரே கடையைத் திறக்க இயலும்.
முதல் முறை குற்றத்துக்கு ரூ. 25 ஆயிரம், 2ஆம் முறை குற்றத்துக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 3ஆம் முறை குற்றம் செய்தால் உணவுப் பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்றிதழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். அவா்கள் 90 நாள்களுக்குப் பின்னரே புதிய உரிமம், பதிவுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க இயலும்.
மேலும், உணவு மாதிரி எடுக்கப்பட்டது தொடா்பாக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதித்துறை நடுவரால் விசாரிக்கப்பட்டு, ரூ. 5 லட்சம் வரை அபராதம், 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
புகையிலை, நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்கள் விற்கப்படுவது தொடா்பாக பொதுமக்கள் 94440 42322, 0461-2900669 ஆகிய தொலைபேசி எண்களுக்கோ, பச ஊா்ா்க் நஹச்ங்ற்ஹ் இா்ய்ள்ன்ம்ங்ழ் என்ற கைப்பேசி செயலி மூலமோ புகாா் அளிக்கலாம். அவா்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றாா் அவா்.