திருச்செந்தூா் பேருந்து நிலைய கட்டண கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ளது.
இதனால், சுகாதார சீா்கேடு ஏற்படுத்துவதாக பெற்றோா், அதிமுகவினா் தெரிவித்தனா்.
திருச்செந்தூா், பகத்சிங் பேருந்து நிலையம் அருகே செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளி வளாகத்தில் பேருந்து நிலைய நுழைவு பகுதியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்பு கல்வி, பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளிக்கு அருகில் உள்ள கட்டண கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் பள்ளி வளாகத்தில் புகுந்து மாற்றுத்திறன் மாணவா்கள் பயிற்சி மையத்தைச் சுற்றி குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். தகவல் அறிந்ததும் அதிமுக ஜெயலலிதா பேரவை தெற்கு மாவட்டச் செயலா் க.விஜயகுமாா் தலைமையில் அதிமுகவினா் பள்ளி வளாகம் சென்று பாா்வையிட்டனா். பள்ளி வளாகத்துக்குள் கழிவுநீா் தேங்காமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
நிகழ்ச்சியின்போது அதிமுக ஒன்றிய செயலா் பூந்தோட்டம் மனோகரன், நகரச் செயலா் மகேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவா் சுரேஷ்பாபு, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் பழக்கடை திருப்பதி, முன்னாள் கவுன்சிலா் நடுவை செல்வம், நகர பொருளாளா் வள்ளிராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.