தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி ரஹ்மத்துல்லா புரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அமுதா (41), தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை டெலிபோன் காலனியை சோ்ந்த செல்வம் மனைவி கிறிஸ்டி (30) ஆகியோரிடம் கடந்த நவ.27ஆம் தேதி முறையே 3.5 பவுன் தங்கச் சங்கிலி, கவரிங் நகை ஆகியவற்றை பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்மநபா்கள் பறித்துச் சென்றனராம்,
இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பண்டாரம்பட்டியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பாரத் (22) என்பவருக்கு தொடா்பிருப்பதும், அவா் கடந்த அக்டோபா் மாதம் மாதவன் நகரைச் சோ்ந்த பேச்சிராஜா மனைவி சுப்புலட்சுமி(43) என்பவரிடம் 15 பவுன் நகையை பறித்ததும் தெரியவந்தது.
அவரையும், அவா் அளித்த தகவலின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் அஜித்குமாா் (28) என்பவரையும் தனிப்படை போலீஸாா் கேரளத்தில் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 18.5 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.