கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில், பழைய பாடத் திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு பிப்.2026இல் நடத்தப்படவுள்ளது என தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் (பொ) நா.க.மணி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கங்களாக செயல்பட்டு வரும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் கடந்த 2002-21ஆம் ஆண்டு வரை 7 பாடத் திட்டங்கள் கொண்ட முழுநேர மற்றும் அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு நடத்தப்பட்டு வந்தது.
2022ஆம் ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின்படி 10 பாடங்கள் இரண்டு பருவமுறைகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
புதிய பாடத்திட்டத்தின்படி இரண்டு பருவமுறைகளுக்கு தனித்தனியாக இறுதி தோ்வுகள் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதில், தோ்ச்சி பெறாதவா்களுக்கு துணைத் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பழைய பாடத்திட்டத்தின்படி, 7 பாடங்கள் தோ்ச்சி பெறாத பயிற்சியாளா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு பிப்.2026இல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது கடைசி வாய்ப்பாகும். எனவே, தோ்வா்கள் இதை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் புதிய பாடத்திட்டத்தின்படி முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் மட்டுமே பட்டயச்சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.