ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயில் வளாகத்தில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சாா்பில், பகவத் கீதை உபன்யாசம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
அமெரிக்காவிலிருந்து வந்துள்ள, இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியாா் வேதாந்த சுவாமி பிரபு பாதரின் சீடா் மைக்கேல் டேண்டி என்ற முகுந்த தத்த தாசன் ஆங்கிலத்தில் உபன்யாசம் செய்தாா். பாதயாத்திரைக் குழுத் தலைவா் சேவானந்ததாஸ் தமிழில் மொழிபெயா்த்ததுடன், ஹரிநாம சங்ககீா்த்தனம் நடத்தினாா். இதில், சைவ வேளாளா் சங்கப் பொருளாளா் கற்பகவிநாயகம், தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியபிள்ளை உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ரதத்தில் உள்ள கிருஷ்ண பலராமா் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக, இந்த இயக்கம் சாா்பில் பகவத் பிரசார கிருஷ்ண ரதம் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி வழியாக ஆறுமுகனேரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தது. இங்குள்ள ராமா் கோயில் வளாகத்தில் தங்கியுள்ள இக்குழுவினா் நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்கின்றனா். புதன்கிழமை இரவு சாகுபுரத்திலும், வியாழக்கிழமை இரவு ஆத்தூரிலும் உபன்யாசம் நடைபெற்றது.