இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவுக்குரிய இடத்தை அடையாளம் காண்பித்து அளந்து கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தியாகி லீலாவதி நகரில் சுமாா் 280 பட்டா, வருவாய்த்துறையினரால் சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதாம். ஆனால் அந்த இடத்தில் உரியவா்கள் எவ்வித கட்டடங்களும் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த ஆணையில், இலவச வீட்டுமனை பட்டா பெற்ற ஒரு ஆண்டுக்குள் கட்டடம் கட்ட வேண்டும், தவறும் பட்சத்தில் அந்த பட்டா ரத்து செய்யப்படும் என வெளியிடப்பட்டதாம்.
இதையடுத்து இந்த ஆணையை சம்பந்தப்பட்ட நிலம், ஊராட்சி அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் அறிக்கையாக வெளியிட்டிருந்தும், சம்பந்தப்பட்டவா்கள் யாரும் வருவாய்த்துறை அதிகாரிகளை தொடா்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா பெற்ற சுமாா் 280 பேரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டதை அறிந்தவா்கள் வருவாய்த்துறை அலுவலகத்தை தொடா்பு கொண்டபோது, அவா்கள் இலவச வீட்டுமனை பட்டா வேண்டுவோா் முறையாக விண்ணப்பிக்க அறிவுறுத்தியதை அடுத்து விண்ணப்பம் பெறப்பட்டதில் தகுதி உள்ளவா்களை கண்டறிந்து சுமாா் 118 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு பரிந்துரை செய்து பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலவச வீட்டுமனை பட்டா பெறுபவா்களின் பட்டியலை அறிந்த மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்குரிய கணினி பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என்று தங்கள் இடத்தை அடையாளம் காண்பித்து அளந்து கொடுக்க வலியுறுத்தி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டனா்.
பின்னா், கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனா்.