தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் அருகே பீடி இலைகளை கடத்த முயன்ற மூவரை போலீஸாா் கைது செய்து, 2 டன் பீடி இலைகள், வாகனங்கள் பறிமுதல் செய்தனா்.
புதியம்புத்தூா் சிறப்பு சாா்பு ஆய்வாளா் மாரியப்பன், போலீஸாா் திங்கள்கிழமை புதூா்பாண்டியாபுரம் அருகே ரோந்து சென்றபோது, சந்தேகமளிக்கும் வகையில் சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள் தூத்துக்குடி குரும்பூரைச் சோ்ந்த காலபெருமாள் மகன் சுரேஷ்குமாா் (42), குறுகாட்டூா் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் மகேஸ்வரன் (30), குரும்பூா் அங்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் வடிவேல் முருகன் (42) என்பதும், சரக்கு வாகனத்தில் பீடி இலை பண்டல்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இவா்கள் மூவரையும் கைதுசெய்த போலீஸாா் இவா்களிடமிருந்து தடை செய்யப்பட்ட 2 டன் பீடி இலைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, புதியம்புத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.