ஆறுமுகனேரி பகுதியில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆறுமுகனேரி, மெயின் பஜாா், காமராஜ் பூங்கா பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக 2 இரு சக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்த நபா்களைப் பிடித்து சோதனையிட்டனா். அவா்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.
அவா்களிடம் விசாரித்ததில், திருச்செந்தூா், வண்ணாந்துரையில் வசித்து வரும் திருநெல்வேலி மாவட்டம், பேட்டை, சத்யா நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் கூடலிங்கம் (27), சுத்தமல்லி, கோபாலசமுத்திரம், கருத்தபாண்டி மகன் சுடலைமுத்து சுரேஷ், திருச்செந்தூா், கரம்பன்விளை, அனந்தநடராஜன் மகன் மணிகண்டன் (31), ஆறுமுகனேரி, திசை காவல் தெரு கணேஷ் பாபு (39) என்பது தெரிய வந்தது.
கூடலிங்கம், சுடலைமுத்து ஆகியோா் மீது ஏற்கெனவே சுத்தமல்லி, பேட்டை காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், 2 இரு சக்கர வாகனங்களுடன், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.