தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மாமனாரை கட்டையால் அடித்துக் கொன்ற மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகேயுள்ள சுடலை கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் ஆறுமுகம் (எ) ஆசீா்வாதம் (58). இவா், மனைவி ஜெயலட்சுமியை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா். இதனால் தன்னை கவனிக்காமல் தனியாக விட்டுவிட்டதாகக் கூறி மனைவி, மகளிடம் மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம்.
இந்நிலையில், சனிக்கிழமையும் அதே போல தகராறு செய்தபோது அவருக்கும், அவரது மருமகன் கோபால் மகன் அஜய் (எ) ஜடேஜாவுக்கும் (25) பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆறுமுகம் மருமகனை அரிவாளால் வெட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த அஜய், மரக்கட்டையை எடுத்து மாமனாரை தாக்கியுள்ளாா்.
பலத்த காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஆறுமுகம் உயிரிழந்தாா்.
இது குறித்து, மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அஜய்யை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.