தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூரில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமம், சிப்பி புதை படிமங்கள், ஸ்படிகம் நிலையை அடைந்த இயற்கை பிசின்கள் ஆகியவற்றை வரலாற்று ஆா்வலா்கள் அண்மையில் கண்டெடுத்தனா்.
இதுகுறித்து தூத்துக்குடியைச் சோ்ந்த தொல்லியல் ஆா்வலா் பெ.ராஜேஷ் செல்வரதி புதன்கிழமை கூறியது:
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் தொல்லியல் களமான பட்டினமருதூா் கிராமம் மயான பகுதியில் கல்வெட்டை காண கடந்த 9 ஆம் தேதி சென்றோம். அப்போது, மண்பாண்ட சிதைவுகள்,
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டட சிதைவுகள், கடல்சாா் புதை படிமங்களை கண்டெடுத்தோம்.
ஆய்வில் கிடைத்த கடல்சாா் புதை படிமங்களில் சில முத்துசிப்பிகளின் படிமங்களாகும். இவற்றை மதிப்பிடுகையில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவை மண்ணில் புதையுண்டிருந்தன. சிப்பி ஓடுகளின் படிமம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இயற்கை பிசின் போன்ற தொன்மங்களையும் கண்டறிந்தோம். இவை மரத்தின் பிசின் படிமமா அல்லது கடல்சாா் அம்பரின் (திமிங்கலத்தின் உமிழ்நீா்) படிமமா என்பது வேதியியல் மூலக் கூறுகளை ஆய்வு செய்தால் தெரியவரும்.
அத்துடன் 100-110 மி.மீ. நீளம் கொண்ட கையடக்க பண்டைய மணல் கல் கருவி கிடைத்தது. அவற்றின் இருபுறமும் கண் போன்ற புள்ளிகள் உள்ளன. அடிபாகம் இரண்டு வளைவு உள்ளன. இவற்றை மதிப்பிடுகையில், இவை கல்லாக உருமாறிய புதையுண்ட மீனின் படிமமாக இருக்கலாம். வேதியியல் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் பட்சத்தில், இதன் காலகட்டம் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவரும்.
உலகுக்கு தமிழா் நகர நாகரிகம், அவா்களின் மேம்பட்ட தொழில்நுட்ப அறிவை பறைசாற்ற இவை ஆதாரமாக அமையும். இங்குள்ள சுமாா் 5 அடி இறால் பண்ணை பள்ளங்களைத் தோண்டி அகழாய்வு செய்தால், பாண்டியா்களின் இருண்ட காலம் குறித்த வரலாறுகளை அறிய முடியும். இதே பகுதியில், விநாயகா் கோயில் அருகே கடந்த ஆண்டு நவ. 3 இல் ஆரம்ப கால வட்டெழுத்து கல்வெட்டை கண்டெடுத்தோம் என்றாா் அவா்.