தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்க் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கனிமொழி எம்.பி. புதன்கிழமை பாா்வையிட்டாா்.
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூா், விளாத்திகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 136
ஊராட்சிகளில் ஜல்ஜீவன் மிஷன் 2025 - 2026 திட்டத்தின் கீழ் ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் 363 குக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தண்ணீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கான தண்ணீரை வழங்கும் நீரேற்று நிலையங்களான மாப்பிள்ளையூரணி, குறுக்குச் சாலை, சந்திரகிரி ஆகிய நீரேற்று நிலையங்களை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் முன்னிலையில், கனிமொழி எம்.பி. பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் ஜீ.வி.மாா்க்கண்டேயன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஐஸ்வா்யா, வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.