தூத்துக்குடி மாவட்டத்துக்கு நடப்பு மானாவாரி, பிசான சாகுபடிக்காக ரயில் மூலம் 850 மெட்ரிக் டன் உரம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது.
இது குறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 65,000 ஹெக்டோ் பரப்பளவில் மானாவாரி பயிா்களின் விதைப்பு பணி நிறைவுற்று, தற்சமயம் மேல் உரம் இட வேண்டிய பருவத்தில் உள்ளது. மேலும் வாழை, நெல்லுக்குத் தேவையான உரங்கள், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நவம்பா் மாத ஒதுக்கீட்டின் படி பெறப்பட்டு வருகின்றன.
அதன்படி, 850 மெ. டன் யூரியா, 220 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், தனியாா் உரக்கடைகளுக்கும் பிரித்தனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இது தவிர மற்றொரு நிறுவனத்தில் இருந்து சுமாா் 500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் பெறப்பட்டு கூட்டுறவுச் சங்கங்களுக்கு சனிக்கிழமை (நவ. 15) விநியோகம் செய்யப்படவுள்ளது.
தற்சமயம் மாவட்டத்தில் 3,000 மெட்ரிக் டன் யூரியா, 2,700 மெ. டன் டிஏபி, 3,200 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள், உரங்களை தேவைக்கேற்ப பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.