சேவை குறைபாடு காரணமாக வாடிக்கையாளருக்கு எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் ரூ.1.64 லட்சம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்தவா் அருண் சக்திவேல். இவா், திருச்செந்தூா் குமாரபுரத்திலுள்ள எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்குவற்கு முழுத் தொகையையும் செலுத்தியுள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம், ஒப்புக்கொண்டபடி 10 நாள்களுக்குள் பைக்கை வழங்கவில்லையாம்.
ஆனால், 3 மாதங்களுக்குப் பின், பைக் வழங்கப்பட்டுவிட்டதாக இவரது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.இதுகுறித்து அந்நிறுவனத்திடம் கேட்டபோது, வாகனம் வேறு ஒருவரின் பெயரில் வந்துள்ளதாக கூறியுள்ளனா்.
இதில் அதிருப்தி அடைந்த அவா், வழக்குரைஞா் மூலம் அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லையாம். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அவா் வழக்குத் தொடா்ந்தாா்.
இவ்வழக்கை தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் அதன் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விசாரித்து, ஏற்கெனவே செலுத்திய முழுத் தொகையான ரூ.1,04,235, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50,000, வழக்கு செலவு ரூ.10,000 என மொத்தம் ரூ.1,64,235-ஐ ஆறு வாரத்துக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் தொகையை செலுத்தும் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.