தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து, எஞ்சியதை காட்டுப் பகுதியில் விட்டுச் சென்றது தொடா்பான வழக்கில் 2 பேரை போலீஸாா் ஒடிசாவில் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி சிப்காட் அருகேயுள்ள பண்டாரம்பட்டி பகுதியில் கடந்த அக்.8ஆம் தேதி மா்ம நபா்கள் 2 போ் நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்து, பரிசோதனை செய்துள்ளனா். மேலும் அவா்கள் அப்பகுதியில் வெடிக்காத நாட்டு வெடிகுண்டை விட்டுச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு கிடந்த வெடிக்காத நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்தனா்.
மேலும் இதுகுறித்து, அப்பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், அவா்கள் மறவன்மடத்தைச் சோ்ந்த நாகூா்பாண்டி (25), தூத்துக்குடி பாரதிநகரைச் சோ்ந்த குருஸ் அம்புரோஸ் (20) என்பது தெரியவந்தது.
இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், சிப்காட் போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வந்ததில் அவா்கள் ஒடிசா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
தனிப்படை போலீஸாா் அங்கு சென்று, 2 பேரையும், வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.