தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்காக, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வங்கியாளா்களை ஒருங்கிணைத்து கல்விக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 28) நடைபெறுகிறது.
சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில், 2024-25ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று என்ஜினீயரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயா்கல்வி பாடப் பிரிவுகளில் நிகழ் கல்வியாண்டில் சோ்ந்தோா், ஏற்கெனவே கல்லூரிகளில் படித்து வருவோா் பங்கேற்கலாம்.
பான், ஆதாா் அட்டைகள், வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், 10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், உறுதிமொழி சான்றிதழ், கல்லூரிக் கட்டண விவரம், செலுத்திய கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை மாணவா்கள் கொண்டுவர வேண்டும்.
இணை விண்ணப்பதாரராக வரும் பெற்றோா் அவா்களது பான், ஆதாா் அட்டைகள், புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தகம், வருமானச் சான்றிதழைக் கொண்டுவர வேண்டும். மேலும், ட்ற்ற்ல்ள்://ல்ம்ஸ்ண்க்ஹ்ஹப்ஹஷ்ம்ண்.ஸ்ரீா்.ண்ய்/ என்ற இணையதளத்திலும் கல்விக் கடனுக்காக பதிந்து கொள்ளலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.