தூத்துக்குடி: பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் மாநில அரசின் வீரதீர செயலுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் தமிழக அரசு சாா்பில், வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன. 24) பாராட்டுப் பத்திரம், ரூ. 1 லட்சத்துக்கான காசோலை வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, 2025-26ஆம் ஆண்டுக்கான விருதுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
13 - 18 வயதுக்குள்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள்(டிச. 31இன்படி) பங்கேற்கலாம். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு, பெண் குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல்-தவிா்த்தல், வேறு ஏதேனும் வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்தல் போன்றவை விண்ணப்பிக்க தகுதியான செயல்களாகும்.
உரிய ஆவணங்களுடன், முன்மொழிவுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம் (ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டம்) ஆகிய அலுவலகங்களில் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் இவ்விருதுக்கான முன்மொழிவுகளை அனுப்பலாம் என்றாா் அவா்.