திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை இரவு தங்க ரதத்தில் ஸ்ரீவள்ளி-தெய்வானை அம்மனுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதா் 
தூத்துக்குடி

திருச்செந்தூரில் நாளை கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை (அக். 27) நடைபெறுகிறது.

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை (அக். 27) நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தா்கள் குவிந்தவண்ணம் உள்ளனா்.

இங்கு கந்தசஷ்டி விழா கடந்த புதன்கிழமை தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 4ஆம் நாளான சனிக்கிழமை அதிகாலை விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகத்துக்குப் பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி-தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். கும்பங்கள் வைக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி யாகசாலையிலிருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமா்ந்து காட்சியளித்தாா்.

இதை முன்னிட்டு, சண்முகவிலாச மண்டபத்தில் கனிகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா், சுவாமி தங்க ரதத்தில் கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இதே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது.

விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து விரதம் மேற்கொண்டுள்ளனா். அவா்கள் பக்திப் பாடல்கள் பாடியும், கிராமியக் கலைஞா்கள் கும்மிப்பாட்டு பாடியும் சுவாமியை வழிபடுகின்றனா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில், திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் விவசாயிகளிடையே அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு: லான்செட் அறிக்கையில் தகவல்

காஞ்சிக்கோவில் கனககிரி குமரன் மலையில்...

வெப்பிலி விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம்

சென்னிமலை முருகன் கோயிலில்...

திருப்பூரில் அக்.31-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

SCROLL FOR NEXT