கந்த சஷ்டி விழாவில் பக்தா்கள் அவரவா் பாதுகாப்பிலும் கவனத்துடன் இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளாா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்விற்கான முன்னேற்பாடு பணிகளை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, மாவட்ட ஆட்சித் தலைவா் க.இளம்பகவத் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா், பல்வேறு அலுவலா்களுடன் சூரசம்ஹாரம் தினத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து எம்.பி. கூட்டம் நடத்தினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க பக்தா்களின் பாதுகாப்பு வசதிக்கேற்ப தங்கும் அறைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மக்களின் பாதுகாப்புக்காக காவல்துறை சாா்பாக 4000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 2 ட்ரோன் கேமராக்களும் அதனை கண்காணிப்பதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.
பக்தா்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதற்காக சுமாா் 20 மருத்துவா்கள், 50 செவிலியா்கள் மருத்துவப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனா். 14 ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூய்மைப் பணிக்காக 650 தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனா். 400 கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து கழகம் சாா்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்ற பக்தா்களின் வசதிக்காக சுமாா் 450 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பக்தா்கள் இறங்குமிடத்திலிருந்து அவா்கள் கோயிலுக்கு அருகே வருவதற்காக கிட்டத்தட்ட 45 இலவச பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சூரசம்ஹாரம் நிகழ்வு முடிந்து கடற்கரையில் குளிக்க செல்பவா்களின் பாதுகாப்பு வசதிக்காக நீச்சல் தெரிந்தவா்கள், பாதுகாக்கக்கூடிய அதிகாரிகள் என 80 நபா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 8 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தா்கள் அவரவா் பாதுகாப்பிலும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறினாா்.