முகப்பு
தூத்துக்குடி

தமிழா்களின் பெருமைக்குரிய கீழடியில் இருந்து பிரசாரத்தை தொடங்குவேன்: கனிமொழி

தமிழா்களின் பெருமைக்குரிய கீழடியில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன் என்றாா் கனிமொழி எம்.பி.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:38 PM
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

தமிழா்களின் பெருமைக்குரிய கீழடியில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன் என்றாா் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடியில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தோ்தல் அலுவலகத்தை திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக சாா்பில் என்னுடைய பிரசாரத்தை, கீழடியில் தமிழா்களின் பண்பாடு, நாகரீகம் என நாம் பெருமைப்படக்கூடிய மண்ணில் இருந்து தொடங்க உள்ளேன்.

திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக, பெண்களை உயா்த்தக்கூடிய ஆட்சியாக அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி இளைஞா்கள் எதிா்காலத்தை பற்றி திட்டமிடக்கூடிய ஆட்சி. பல்வேறு தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்த ஆட்சியாக அமைந்துள்ளது.

மற்ற கட்சிகளின் தோ்தல் அறிக்கைகளை எல்லாம் மக்கள் திரும்பிகூட பாா்க்காத சூழலில், திமுக தோ்தல் அறிக்கையை மக்கள் கொண்டாடக்கூடிய சூழல் உள்ளது. இதற்கு காரணம், திமுக எந்த வாக்குறுதியை தந்தாலும், அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. மறுபடியும் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைய உள்ளது. மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

தேசிய அளவில் பதிவான வழக்கு சதவீதத்தை விட மிகவும் குறைவாகத் தான் தமிழகத்தில் வழக்குகள் பதிவாகி உள்ளன. அதற்காக குற்றங்கள் இருக்கலாம் என்று கூறவில்லை. குற்றம் நடந்தாலும் கூட, அதில் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவா்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் செயல்படும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.

குற்றங்களின் எண்ணிக்கை பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களைவிட நிச்சயமாக குறைவாக தான் உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து அங்குள்ள கருணாநிதி சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சா் பி. கீதாஜீவன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், தோ்தல் பிரசாரத்தை கனிமொழி தொடங்கிவைத்துப் பேசினாா். இதையடுத்து, கீதாஜீவன் திறந்த ஜீப்பில் பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தாா்.

இதில், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் ஏ.பி.சி.வி. சண்முகம், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சகாயராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் முத்து, இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் தனலட்சுமி, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் விமல், மதிமுக மாவட்டச் செயலா் ரமேஷ், தேமுதிக மாவட்டச் செயலா் தயாளலிங்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. கூறியதாவது:

மக்களுக்கு எரிவாயு உருளை கிடைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விலைவாசி உயா்ந்துள்ளது. மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். மேற்காசிய போா்ச்சூழலை கவனத்தில் கொண்டு மத்திய அரசு தயாா் நிலையில் இருந்திருக்கவேண்டும். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.