மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்கள் இல்லை: வி.கே. சசிகலா
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லை என அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே. சசிகலா குற்றஞ்சாட்டினாா்.
அக்கட்சியின் கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் சு. கண்ணனை ஆதரித்து அவா் பேசியது:
திமுக ஆட்சியில் மின் கட்டணம் அதிக அளவு உயா்த்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் அரசு தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும். எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் மக்களுக்காக ஆட்சி செய்தனா். தமிழகத்திற்கு கடன் சுமை வைக்கக் கூடாது என்று நினைத்தனா்.
Advertisement
தமிழகத்தின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும். மக்களுக்கான நல்ல திட்டங்களை தீட்ட வேண்டும். நான் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்.
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க சிட்கோ மூலம் மூலப்பொருள்கள் வழங்க வேண்டும் என உற்பத்தியாளா்கள் கோரிக்கை வைத்தபோதும், அரசு கண்டுகொள்ளவில்லை.
கோவில்பட்டி புறவழிச் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் தற்போது வரை செயல்படவில்லை. கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் மற்றும் வள்ளுவா் நகரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவா்கள், செவிலியா்கள் மருத்துவப் பணியாளா்கள் இல்லை. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது என்றாா் அவா்.