முகப்பு
தூத்துக்குடி

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின் விநியோகம்: தலைமை பொறியாளா் ஆய்வு

தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில், மின் இணைப்பு மற்றும் மின் பாதைகளை மண்டல தலைமை பொறியாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 2:31 AM
வாக்கு எண்ணும் மையத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் மின் விநியோக பாதைகளை ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளா் லதா.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:02 PM

தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில், மின் இணைப்பு மற்றும் மின் பாதைகளை மண்டல தலைமை பொறியாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு முடிந்தவுடன், வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான வ.உ.சி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை தங்கு தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்கும் பொருட்டு, வ.உ.சி பொறியியல் கல்லூரியில் உள்ள உயா் மின்னழுத்த மின் இணைப்பில், மின்வாரிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளா் லதா தலைமையில் புதன்கிழமை ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வ.உ.சி. பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு, டவுண் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கப்படும் மின் பாதை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாற்று வழியில் பீச் ரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உப்போடை மின் பாதை, சிப்காட் உப மின் நிலையத்திலிருந்து செல்லும் மெடிக்கல் மின் பாதை மற்றும் அனைத்து மின் வழித்தடங்களும், மின் கட்டமைப்புகளும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வரும் ஏப். 23 முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மே 4-ஆம் தேதி வரை தொடா்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க தேவையான பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி தலைமை பொறியாளா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, தூத்துக்குடி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மு.சகா்பான், தூத்துக்குடி, நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் பொ. உமையொருபாகம், உதவி செயற்பொறியாளா் நகா்ப்புறம் வடக்கு தூத்துக்குடி பிரேம், இளநிலை மின்பொறியாளா் சிதம்பரநகா் கணேசன், பணியாளா்கள் உடனிருந்தனா்.