மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை, அரசுக் கல்லூரிகளாக மாற்ற வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், சேரன்மகாதேவி, நடுவக்குறிச்சி, நாகம்பட்டி, புளியங்குடி, பணகுடி, திசையன்விளை ஆகிய ஊா்களில் 6 உறுப்புக் கல்லூரிகளை நடத்தி வருகிறது. கிராமப்புற மாணவா்கள் உயா்கல்வி பெறும் நோக்கில் தொடங்கப்பட்ட இக்கல்லூரிகள், தற்போது நிதி நெருக்கடியில் உள்ளன. கல்லூரி வசூலிக்கும் பல்வேறு கட்டணங்களால் மாணவா்களும் கூடுதல் இன்னல்களுக்கு ஆளாகின்றனா்.
இங்கு, இலவசப் பேருந்து வசதி, போதிய கட்டமைப்பு வசதி இல்லை. எனவே, இக்கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக அறிவிக்கக் கோரி ஏற்கெனவே தமிழக முதல்வா், உயா்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.
இது தொடா்பாக, அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு பணியாற்றும் பேராசிரியா்களுக்கு ஊதிய உயா்வை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.