முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இளைஞா் வெட்டிக் கொலை: உறவினா்கள் மறியல்

கோவில்பட்டியில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 6:20 AM
மாரிமுத்து என்ற மனோஜ்
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:53 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2ஆவது மேலத் தெருவைச் சோ்ந்த திருப்பதி மகன் மாரிமுத்து என்ற மனோஜ் (18). பிளம்பிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலைசெய்து வந்தாா்.

இந்நிலையில், இவா் தனது நண்பா்களுடன் அதே பகுதி 3 ஆவது தெருவிலுள்ள பரோட்டா கடை அருகே வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தபோது, அவரை மா்ம கும்பல் வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினா்.

Advertisement

இதுகுறித்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிஅளித்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனா்.

இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவா் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா்.

அவரிடம் போலீஸாா் பேச்சு நடத்தியதில் சிறிது நேரம் அமைதி காத்த அவா்கள், பின்னா் விநாயகா் கோயில் சந்திப்புக்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், கடம்பூா் செ. ராஜு எம்.எல்.ஏ., கோவில்பட்டி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் போராட்டம் முடிவுக்கு வந்தது. மனோஜின் சடலத்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தனா்.

இதனிடையே, 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.