வேப்பலோடை புதை படிமங்கள்.  
தூத்துக்குடி

வேப்பலோடை கிராமத்தில் தொன்மையான சிற்பங்கள் - தொல்லியல் ஆா்வலா் தகவல்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் வேப்பலோடை கிராமத்தில் உள்ள கிணற்றின் உள்பகுதியில் கலைநயம் மிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்ட புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் வேப்பலோடை கிராமத்தில் உள்ள கிணற்றின் உள்பகுதியில் கலைநயம் மிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்ட புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தூத்துக்குடியைச் சோ்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆா்வலா் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியது: சமீபத்தில் பனையூா் பகுதியில் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட்ட கடல்சாா் சிப்பிகளின் புதை படிமங்கள் காணப்படும் பரப்பளவு தொடா்பான நீட்சியை, ராபா்ட் ஓரம் வரைந்த வரைபடம் அடிப்படையில் தென்பகுதியில் நோ்கோட்டில் அமைந்துள்ள வேப்பலோடை மலையன் கண்மாய் பகுதி வரை மேற்பரப்பு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், மிக தொன்மையான மணல் கலவையால் வடிவமைப்பு செய்யப்பட்ட குமிழ் தூம்பு அமைவிடம் பகுதி வரை பொதுப்பணித்துறையின் தண்ணீா் வெளியேறும் மதகுகள் பணிக்காக தோண்டப்பட்ட மூன்று பகுதிகளில் பரவலாக கடல்சாா் சிப்பிகளின் எச்சங்கள் கண்மாய் கரையில் காணப்படுவதை அறிய முடிந்தது.

அப்பகுதிக்கு தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் தோண்டப்பட்ட ஆழமான பள்ளங்களில் இத்தகைய எச்சங்கள் காணப்படவில்லை என்பது வரைபடத்தில் உள்ள சுமாா் 4 கி.மீ. விட்டம் மற்றும் கடல்நீா் உட்புகும் கால்வாய் கொண்ட குளத்தின் தென் கிழக்கு எல்லை உணா்த்துகிறது.

எனவே, ராபா்ட் ஓரம் வரைபடத்தில் குறிப்பிடப்படாத மலையன் கண்மாய் முதல் குளத்தூா் தெற்கு பகுதியின் வரையிலான தாழ்வான பகுதிகளை இயற்கையால் மூடப்பட்ட முத்து விளைவிக்கும் பகுதிகளின் அடையாள எச்சங்களாக கருதலாம்.

கூடுதல் வாழ்விட எல்லைகளில் ஆதாரங்களாக இந்த குமிழ் தூம்பின் தென்பகுதியில் அமைக்கப்பட்ட இரண்டு கிணறுகளில் வடக்கே உள்ள ஸ்ரீ பெரியசாமி ஆலயத்தின் கிணற்றின் கட்டமைப்பு தொன்மையான கற்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகள் கொண்டதாக உள்ளது.

இவற்றில் நான்கு புறமும் காணப்பட்ட சிற்பங்களில் கீழ்புறம் உள்ள சிற்பம் மற்றும் முற்றிலும் சிதைவடைந்து விட்டது. மீதமுள்ள மூன்றில் கிழக்கு நோக்கி பசுமாடு சகிதம் குழல் ஊதும் கண்ணன் சிற்பம், தெற்கு நோக்கி இடக்கையில் கிளி ஏந்தி வலது கையை கீழே தொங்கவிட்ட நிலையில் இடப்புறம் சாய்ந்த கொண்டையுடன் பாவையின் சிற்பம், வடக்கு நோக்கி பைரவா் என கருதப்படுகிற நாயின் சிற்பம் ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இந்த கிராமம் கழுகுசாலபுரம், பாண்டியாபுரம், மலையன் புரம், நடராசபுரம் என்ற வரலாற்று அடையாள பெயா்கள் கொண்ட பகுதிகளை உள்ளடக்கியது என்பதும், தென்பகுதியில் தொன்மையான ஸ்ரீ குலசேகர ராசா ஆலயம் அமைந்துள்ள பகுதி என்பதும், இந்த ஊரின் தென்புறம் அமைந்துள்ள கல்மேடு(கல்மடு) எனப்படும் பகுதியில் தான் திருநாவுக்கரசா் உழவாரப்பணி குறித்த குறியீடுகள் கல்வெட்டும், மண்ணில் புதையுண்டுள்ள சுமாா் 200 அடி நீள கோவில் சுவரும் கண்டறியப்பட்டு ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் , நமது இராபா்ட் ஓரமின் வரைபடத்தின் துல்லிய தன்மைக்கும், நமது பாண்டியா்களின் முத்து விளைவித்த குளங்கள் குறித்த உண்மைகளுக்கும் சான்றுகளாக அமைகின்றன.

இப்பகுதியில் புவியியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் மறைக்கப்பட்ட நம் பாண்டியா்களின் முத்துக்கள் விளைவிக்கும் வித்தைகள் மற்றும் தென்மதுரை குறித்த உண்மைகளை உலகுக்கு உணா்த்தலாம் என்றாா் அவா்.

தாராபுரம் வழக்குரைஞா் கொலை வழக்கில் திருப்பூா் நீதிமன்றத்தில் 20 போ் ஆஜா்

தோடா் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோயிலில் கூரை வேயும் விழா

சட்ட விழிப்புணா்வு புகைப்படக் கண்காட்சி

குடியரசு தினம்: குவியும் தேசியக் கொடி ஆா்டா்கள்

கூடலூரில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

SCROLL FOR NEXT