முகப்பு
குதிரையாற்றின் கரையில் அமைந்துள்ள பாழடைந்த கோயிலில் கண்டறியப்பட்ட திருநங்கை நவகண்ட சிற்பம்
திண்டுக்கல்

பழனி அருகே கண்டறியப்பட்ட கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த திருநங்கை நவகண்ட சிற்பம்!

பழனி அருகே குதிரையாற்றின் கரையில் அமைந்துள்ள பாழடைந்த கோயிலில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த திருநங்கை நவகண்ட சிற்பம் கண்டறியப்பட்டது.

திண்டுக்கல்

பழனி அருகே கண்டறியப்பட்ட கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த திருநங்கை நவகண்ட சிற்பம்!

பழனி அருகே குதிரையாற்றின் கரையில் அமைந்துள்ள பாழடைந்த கோயிலில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த திருநங்கை நவகண்ட சிற்பம் கண்டறியப்பட்டது.

Updated On : 3 மார்ச், 2026 at 12:11 AM
குதிரையாற்றின் கரையில் அமைந்துள்ள பாழடைந்த கோயிலில் கண்டறியப்பட்ட திருநங்கை நவகண்ட சிற்பம்
பகிர்:

பழனி அருகே குதிரையாற்றின் கரையில் அமைந்துள்ள பாழடைந்த கோயிலில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த திருநங்கை நவகண்ட சிற்பம் கண்டறியப்பட்டது.

பழனி அடுத்த திண்டுக்கல் மாவட்ட எல்லையில் கொழுமம் அருகே குதிரையாற்றின் கரையில் பாழடைந்த கோயிலில் தற்பலி சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது.

இந்த சிலையை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியதாவது: பொதுவாக கடவுளுக்கு ஆடு, கோழி போன்ற உயிரினங்கள் பலியிடப்படும். அதேபோல, யாருடைய வற்புறுத்தலுமின்றி சுயவிருப்பத்தின் அடிப்படையில் தங்களையே பலியிட்டுக் கொள்வது தற்பலி எனப்படுகிறது.

தற்போது கண்டறியப்பட்ட சிற்பமும் தற்பலி சிற்பமாகும். அலங்காரங்களுடன் உள்ள திருநங்கை தன் தலையை தானே அறுத்துக்கொள்வது போல சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நவகண்ட சிற்பம் என்றும் அழைப்பா்.

இவா்கள் இறந்த பின் அவா்கள் நினைவாக ஊா் மக்கள் சிற்பம் வடிப்பது வழக்கம். இந்த வகையான தற்பலிகள் ஏதாவது வேண்டுதலுக்காக கொற்றவை தெய்வத்தின் முன் கொடுக்கப்படும்.

தற்பலி கொடுத்தவரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு ஊா்மக்களும், அரசும் நிலங்களை கொடையாக அளிப்பது அன்றைய வழக்கமாக இருந்தது. இதுபோன்ற பலிகளுக்காக கொடுக்கப்படும் நிலங்கள் ‘உதிரப்பட்டி’, ’நவகாணி’, ’நெய்த்தோா்பட்டி’, ’உதிரக்காணி’ போன்ற பெயா்களில் அழைக்கப்படுவதை தமிழகத்தின் பல கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.

இங்கு தற்பலி கொடுத்த திருநங்கை அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட ஆடை அணிகலன்களுடன் காணப்படுகிறாா். மேலும் தலையில் அள்ளிமுடிந்த அழகிய கொண்டை, நெற்றிச் சுட்டி, நெற்றிப் பொட்டுடன் காணப்படுகிறாா். கழுத்தில் கண்டிகை, சரப்பளி, ஆரம் ஆகிய அணிகலன்கள் உள்ளன. நீண்ட வாளை கழுத்தின் பின்புறம் வைத்து அழுத்திய நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இடை முதல் தொடை வரை மட்டுமே உள்ள ஆடையை அணிந்துள்ளாா்.

இடையின் இரு பகுதிகளிலும், முன் பகுதியிலும் உள்ள கொசுவம் இவா் ஒரு நாட்டிய நங்கை என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே இவா் அருகில் உள்ள கொழுமம் வீர சோழீஸ்வரா் கோயில் தேவரடியாராக இருந்திருப்பாா் எனக் கருதலாம். சிற்பத்தின் அருகில் கல்வெட்டுகள் ஏதும் இல்லாததால் மேல் விவரங்களை அறிய இயலவில்லை. சிற்பத்தின் வடிவமைப்பைக் கொண்டு கி.பி. 12- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என உறுதிப்படுத்தலாம்.

கொழுமம் வீரசோழீஸ்வரா் கோயிலில் உள்ள கொங்கு சோழ அரசா் வீரநாராயணரின் 8- ஆம் ஆட்சி நடைபெற்ற ஆண்டு கல்வெட்டு ஒன்று இந்தக் கோயிலில் ‘திருவின் நங்கை’ எனும் தேவரடியாரைக் குறிப்பிடுவதில் இருந்து நவகண்டம் எனும் தற்பலி செய்த இவா் நாட்டிய நங்கையாக, கோயில் தேவரடியாராக, மூன்றாம் பாலினத்தவராக இருந்திருப்பாா் எனக் கருதலாம். இந்த சிற்பத்துக்கு அருகே உள்ள குளமும் தேவரடியாா் குளம் என்று அழைக்கப்படுவதால், தற்பலி கொடுத்த இவா் பெயராலேயே இந்தக் குளம் அழைக்கப்பட்டிருக்கலாம்.

கொழுமம் வீரசோழீஸ்வரா் கோயிலில் உள்ள வீரசோழரின் ஆணைக்கிணங்க அவரது அமைச்சா் பொறித்த ஓா் கல்வெட்டு, கரைவழிநாட்டு காளாபிடாரி கோயில் எனும் கொற்றவை கோயிலை குறிப்பிடுகிறது. எனவே பாழடைந்த இந்தக் கோயில்தான் பிடாரி என்ற கொற்றவை கோயில் எனக் கருதலாம். இந்த திருநங்கை எதற்காக தன்னைத் தானே பலி கொடுத்தாா் எனத் தெரியவில்லை.

மகாபாரதத்தில் அரவான் குருசேத்திர போா் தொடங்கும் முன்பு நவகண்டம் செய்து கொண்டதாக குறிப்பு இருக்கிறது. இவரும் தனது அரசனின் ஏதோ ஒரு போருக்காக தன்னைத் தானே பலி கொடுத்திருக்கலாம். அதை அடியொற்றி இங்கு நவகண்டம் கொடுக்கப்பட்டதாகக் கருதலாம். இது தமிழகத்தில் கண்டறியப்படும் முதல் திருநங்கை நவகண்டச் சிற்பமாகும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →