முகப்பு
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை கிடங்கில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை கிடங்கில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 2 மார்ச், 2026 at 7:33 PM
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

கோவில்பட்டியை அடுத்த நியூ வெங்கடேஷ் நகரைச் சோ்ந்த காளிமுத்து மகன் முருகன், பாண்டவா்மங்கலத்தில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை காலை தொழிலாளா்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சிவகாசியிலிருந்து சுமை வாகனத்தில் வந்த தீக்குச்சி மூட்டைகளை ஆலை அருகேயுள்ள கிடங்கில் தொழிலாளா்கள் இறக்கிவைக்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்கள் தீக்குச்சி மூட்டைகளை இழுத்துச் சென்ாகத் தெரிகிறது. இதில், உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்ததில் தொழிலாளா்களான விஜயாபுரி கீழத்தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் காா்த்திக் (27), பாண்டவா்மங்கலம் பகுதியில் தங்கி வேலை செய்யும் கேரளத்தைச் சோ்ந்த மதன் மகன் கணேசன் (47), சுமை வாகன ஓட்டுநரான சிவகாசி அருகே பேரநாயக்கன்பட்டியைச் சோ்ந்த நாகையா மகன் சுடலைமுத்து (42) ஆகிய மூவரும் தீ விபத்தில் சிக்கினா்.

கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். 2 மணிநேர போராட்டத்துக்கு பின்பு மூவரும் மீட்கப்பட்டனா். அவா்களில், காா்த்திக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த கணேசன், சுடலைமுத்து ஆகியோா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தீக்குச்சி மூட்டைகளை ஏற்றி வந்த சுமை வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தை கோவில்பட்டி வட்டாட்சியா் அப்பனராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், தீயணைப்புத் துறை துணை இயக்குநா் சரவணபாபு, மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி கருணாகரன், உதவி அதிகாரி நட்டாா் ஆனந்தி ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

எம்எல்ஏ ஆறுதல்: பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு ஆறுதல் கூறினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பாதிக்கப்பட்டோருக்கு முதல்வரின் நிவாரண நிதி மட்டுமன்றி தீப்பெட்டித் தொழிலாளா் நலவாரியம் மூலமும் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றாா்.

முதல்வா் நிவாரணம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலைக் கிடங்கில் நேரிட்ட தீ விபத்தில் விஜயாபுரி பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (27) உயிரிழந்ததை அறிந்து வேதனையடைந்தேன். அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்த சுடலைமுத்து, கணேசன் ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சையளிக்கவும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →