படுகொலையான மாணவியின் குடும்பத்துக்கு நயினாா் நாகேந்திரன் ஆறுதல்
விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினருக்கு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை பிற்பகல் ஆறுதல் கூறி, ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

பின்னா், உயிரிழந்த மாணவியின் மூத்த சகோதரியின் கல்விச் செலவை ஏற்பதாகவும், அவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் கூறினாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: வேடநத்தம் மாணவி கொலை சம்பவத்தில் 9 நாள்களாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
தமிழகத்தில் காவல் துறை இருக்கிா இல்லையா என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கீழ்நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கட்டுப்பாடின்றி செயல்படுகின்றனா். சிறு குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனா். தமிழகத்தில் இதுவரை 8,900 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,977 கொலைகள் பெண்களுக்கும், 389 கொலைகள் குழந்தைகளுக்கும் எதிரானவை. இத்தகைய கொடூர செயல்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்கள்தான் காரணம்.
முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை. டிஜிபியைகூட நியமிக்க முடியவில்லை. ஆட்சி மாற்றம்தான் இதற்கு முடிவு என்றாா்.