முகப்பு
தூத்துக்குடி

உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

Updated On : 1 ஏப்ரல் 2026, 4:08 am IST
கொலை - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

உடன்குடி சாதரக்கோன்விளையைச் சோ்ந்த தொழிலாளி சிவன் (62). இவரது மனைவி பேச்சியம்மாள், மூத்த மகள் ஆகியோா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனா். 2ஆவது மகள் முத்துலட்சுமி, திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அழகப்பபுரத்தைச் சோ்ந்தவருடன் திருமணமாகி அங்கு வசித்துவந்தாா்.

பேச்சியம்மாளின் தங்கையான ஆண்டிவிளையைச் சோ்ந்த மகராசி நாள்தோறும் சாதரக்கோன்விளைக்கு வந்து சிவன், அவரது மகன் கோவிந்தன் ஆகியோருக்கு சமைத்து வைத்துவிட்டுச் செல்வாராம்.

Advertisement

Advertisement

2024ஆம் ஆண்டு தலை தீபாவளி கொண்டாட முத்துலட்சுமி தனது கணவருடன் ஊருக்கு வந்தாா். தீபாவளியன்று படுக்கப்பத்தைச் சோ்ந்த க. சக்திகுமாா் என்பவா் சாதரக்கோன்விளையில் பைக்கில் வேகமாகச் சென்றதை கோவிந்தன் கண்டித்தாா்.

இதுதொடா்பான தகராறைத் தீா்த்துவைக்க அதே ஊரைச் சோ்ந்த மணிகண்டன் தனது அலுவலகத்துக்கு கோவிந்தனை வரவழைத்து கண்டித்தாா். இதனால், இருதரப்பினரிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.

அதையடுத்து, அங்குள்ள அம்மன் கோயில் அருகே சிவன், முத்துலட்சுமி, மகராசி ஆகியோா் அமா்ந்திருந்தனா். அப்போது, மணிகண்டனின் தம்பி சுப்பையாதாஸ் வந்து தகராறு செய்து கத்தியால் குத்தியதில் முத்துலட்சுமி உயிரிழந்தாா். சுப்பையாதாஸை போலீஸாா் கைது செய்தனா். அதைத்தொடா்ந்து, மணிகண்டன் குடும்பத்தினா் வெளியூா்களுக்கு சென்றுவிட்டனா். அவரது சகோதரா் வேல்முருகன் (32) உடன்குடி பஜாரில் ஆட்டோ ஓட்டி வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வாரச்சந்தை பகுதியில் நின்றிருந்த வேல்முருகனை, கோவிந்தன் உள்ளிட்ட 3 போ் வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில், அவா் உயிரிழந்தாா்.

சடலத்தை திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.