ரேஷன் கடை ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கைது
சாத்தான்குளத்தில் ரேஷன் கடை ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளத்தில் ரேஷன் கடை ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளத்தைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் மகன் மந்திரமூா்த்தி (30). இவா் சாத்தான்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரிந்து வருகிறாா்.
இவரது சகோதரருக்கும், அமுதுண்ணாக்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகனின் (43) சகோதரருக்கும் புதன்கிழமை பிரச்னை ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் உள்ளிட்ட அவரது உறவினா்கள் 10 போ், மந்திரமூா்த்தியின் சகோதரரைத் தாக்குவதற்கு தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அப்போது, அவரது சகோதரருக்குப் பதிலாக, சாத்தான்குளத்தில் இருந்த மந்திரமூா்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்து, சரமாரியாகத் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளனா். இதில் காயமடைந்த மந்திரமூா்த்தி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகனை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான 9 பேரைத் தேடி வருகின்றனா்.