"சோழர் காலத்தில் அதிகாரமிக்கவர்களாகவும், அடிமைகளாகவும் இருந்தனர் பெண்கள்'
தஞ்சாவூர், ஆக. 20: சோழர் காலத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாகவும், அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர் என்றார் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஆ. பத்மாவதி. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "சோழர் காலப் பெண்களின
தஞ்சாவூர், ஆக. 20: சோழர் காலத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாகவும், அடிமைகளாகவும்
நடத்தப்பட்டனர் என்றார் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஆ. பத்மாவதி.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "சோழர் காலப் பெண்களின் நிலை' குறித்து வியாழக்கிழமை
Advertisement
நடைபெற்ற முனைவர் ந. சஞ்சீவி அறக்கட்டளைச் சொற்பொழிவில் அவர் பேசியது:
"சோழர் கால கோயில்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் பின்னணியிலேயே அக்காலப்
பெண்களின் நிலையை காண வேண்டும்.
கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி பல செங்கல்தளிகளை (கோயில்)
கற்றளியாக்கியவர். முதலாம் ராஜராஜனின் சகோதரி குந்தவை நாச்சியார் தஞ்சை பெருவுடையார்
கோவிலில் தனது தாய், தந்தைக்கு செப்புத் திருமேணியையும், சைவ, வைணவ கோயில்களுக்கு பல
தானங்களையும் செய்தவர்.
அதேபோல, தேவரடியார்களின் பங்கும் முக்கியமானது. இறைவழிபாட்டின் போது இறைவனின்
புகழ்பாடி ஆடுவது மட்டும் இவர்களின் பணியாகக் காணப்படவில்லை. கோயில்களுக்கு தானம்,
கோயில் புனரமைப்பு, திருப்பணிகள் செய்தல், மடங்களில் பணிபுரிதல் போன்றவை அப்பர், சம்பந்தர்
பாடல்களிலும், பல்லவர், பாண்டியர் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.
தஞ்சை பெரியகோவிலில் 400 பெண்கள் பணிபுரிந்துள்ளனர். திருவையாறு, திருவிடைமருதூர்
கோயில்களிலும் பெண்கள் பணிபுரிந்துள்ளனர். திருவொற்றியூரில் பணிநேரம் ஒதுக்குதல் தொடர்பான
பிரச்னை எழுந்த போது வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.
திருவிழாக்களின் போது கூத்து நிகழ்த்தியதோடு கலைகள், செல்வம், அழகிலும் சிறந்து, சமூகத்தில்
செல்வாக்கு மிக்கவர்களாக, உயர்குடியினராக விளங்கினர்.
அரசர்களுக்கு மட்டுமன்றி அரசிகளுக்கும் பள்ளிப்படை கோயில்கள் எடுத்துள்ளனர். மன்னர்
இறந்ததும் சிற்றரச மன்னர்களின் மனைவிகள் உடன்கட்டை ஏறியுள்ளனர். அரசர்களுக்கு அதிகாரிகள்
இருந்ததுபோல, அரசிகளுக்கும் இருந்துள்ளனர். பெண்களுக்கு சீதனமாக நிலம் தரும் வழக்கம்
இருந்துள்ளது. நில உரிமை மற்றும் நில விற்பனை உரிமையும் இருந்தது.
கோயில்கள், மடங்கள், அரண்மனைகளில் பெண் அடிமைகள் இருந்தனர். மன்னர்கள் பிற நாடுகளை
வென்று அங்கிருந்து கொண்டு வந்த பல பொருள்களில் பெண்களும் அடங்கும். அரசகுலப் பெண்கள்
சோழ அரண்மனைகளில் பணிபுரியும் பெண்களாக ஆக்கப்பட்டனர். பெண் துறவிகள் இருந்ததையும்
சில கல்வெட்டுகள் காட்டுகின்றன' என்றார் பத்மாவதி.
நிகழ்ச்சியில் பதிவாளர் ஆ. கார்த்திகோயன் துறைத் தலைவர் பா. செயக்குமார் ஆகியோர் பேசினர்.
முனைவர் பட்ட ஆய்வாளர் மு.ச. ராம்சி வரவேற்றார். முனைவர் மா. பவானி நன்றி கூறினார்.