திருச்சி

அகல் விளக்குகளுக்கு மெருகூட்டும் மூளை முடக்குவாதக் குழந்தைகள்

திருச்சி, நவ. 30:   உடல் அளவில் பாதிப்பு இருந்தாலும், ஆண்டுதோறும் அகல் விளக்குகளுக்கு வண்ணம் தீட்டி, மெருகூட்டி அதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.   மூளைய

கு. வைத்திலிங்கம்

திருச்சி, நவ. 30:   உடல் அளவில் பாதிப்பு இருந்தாலும், ஆண்டுதோறும் அகல் விளக்குகளுக்கு வண்ணம் தீட்டி, மெருகூட்டி அதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.

  மூளையில் கை, கால் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி பாதிக்கப்படுவதால் ஏற்படும் ஒரு நிலையே மூளை முடக்குவாதம் (செரிபரல் பால்ஸி) என்பதாகும். பிறக்கும் முன்னரோ, பிறந்த பின்னரோ இந்தப் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

  தசைகளை இயக்கும் மூளையின் ஆற்றல் தடைபடுவதால், மூளையிலிருந்து பெறப்படும் தவறான கட்டளைகளால் தசைகள் இறுகியோ, தளர்ந்தோ காணப்படுகின்றன.

  இந்தப் பாதிப்பு உள்ள குழந்தைகளில் சிலருக்கு கேட்கும் திறன் மற்றும் கண் பார்வையில் பாதிப்புகள் காணப்படலாம். அதோடு, மனவளர்ச்சியில் குறைபாடு உள்ளதால், சிலருக்கு வலிப்பு நோயும் காணப்படுகிறது.

  இந்தக் குழந்தைகளின் புனர்வாழ்வுப் பணிகளுக்காக "ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் திருச்சிராப்பள்ளி' என்ற பெயரில் 1982-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது முசிறி, லால்குடி, துறையூர், மணப்பாறை ஆகிய இடங்களில் 4 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

  கடந்த 22 ஆண்டுகளாக ஸ்பாஸ்டிக் சொசைட்டியில் உள்ள குழந்தைகள் அகல் விளக்குகளுக்கு வண்ணம் தீட்டி, அதன் மூலம் வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

  கார்த்திகை தீபத்துக்காக அகல் விளக்கு தயாரிக்கப்படும் திருச்சி திருவானைக்கா கொண்டையம்பேட்டை பகுதிகளிலிருந்து 5,000 முதல் 10,000 விளக்குகள் ரகங்களுக்கு ஏற்றவாறு கொள்முதல் செய்யப்பட்டு, ஸ்பாஸ்டிக் சொசைட்டிக்கு கொண்டு வரப்படுகின்றன.

  அவ்வாறு கொண்டு வரப்படும் விளக்குகளை இந்தக் குழந்தைகள் உப்புத்தாள் கொண்டு சுத்தம் செய்கின்றனர். பின்னர், துணியால் துடைக்கின்றனர்.

  இதைத் தொடர்ந்து அகல் விளக்குகளுக்கு முதல் முறையாக மஞ்சள் வண்ணத்தைத் தீட்டுகின்றனர். பின்னர், இரண்டாவது முறையாகவும் மஞ்சள் தீட்டி காய வைத்து பின்னர், அந்த அகல் விளக்குகளில் வித்தியாசமான வண்ணங்களை ஏற்படுத்துகின்றனர்.

  இந்தாண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே இந்தப் பணியைத் தொடங்கிய குழந்தைகள் இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட விளக்குகளுக்கு வர்ணம் தீட்டி, அவ்வளவு விளக்குகளையும் விற்றுள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம்.

  இந்த விளக்குகளை பெரிய நிறுவனங்கள், அமைப்புகளைச் சேர்ந்தோர் வாங்கிச் செல்கின்றனர். ஒரு விளக்கு ரூ. 5 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் ஸ்பாஸ்டிக் சொசைட்டி அமைப்புக்காகவும், அங்குள்ள குழந்தைகளுக்காகவும் முழுமையாகச் செலவிடப்படுகிறது.

  தங்களுடன் இருக்கும் மற்றவர்கள் அகல் விளக்குகளுக்கு வர்ணம் தீட்டுவதை பார்த்து, ஆர்வம் இல்லாத குழந்தைகள்கூட தங்களால் இயன்ற வேலையைச் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். எங்களாலும் எல்லாம் செய்ய முடியும் என்பதையும் இந்தக் குழந்தைகள் நிருபித்து வருகின்றனர் என்கிறார் மூளைவாத பாதிப்புள்ள குழந்தைகளுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து வரும் கமலா.

  நாங்கள் குழந்தைகளைக் கொண்டு அகல் விளக்குகளுக்கு வர்ணம் தீட்டும் பயிற்சியை அளிப்பதன் மூலம் அவர்களின் கைகள், கண் போன்றவற்றின் செயல்பாடு தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும், தங்களுக்கும் ஏதேனும் ஒரு கைத்தொழில் தெரியும் என்ற நிலை அவர்களுக்கு உருவாக்கப்படுகிறது என்றார் ஸ்பாஸ்டிக் சொசைட்டியின் இயக்குநர் சி. சாந்தகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT