திருச்சி, நவ. 30: "அனைவருக்கும் உரிய வாய்ப்பு- சமமான மனித உரிமை' என்ற முழக்கத்துடன் இந்த ஆண்டின் "உலக எய்ட்ஸ் தினம்' டிசம்பர் 1-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
திரையரங்குகளில் கமலஹாசன் தோன்றும் சில நிமிஷ விழிப்புணர்வு விளம்பரங்கள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தினரால் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது- இந்த முழக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே.
"எந்த இடத்திலும்' எச்ஐவி- எய்ட்ஸ் தொற்றாளர்கள் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே அந்த விளம்பரத்தின், இந்த நாள் முழக்கத்தின் பிரதான நோக்கம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் போதிய கவனிப்பின்மை, பகட்டுக்கென- திட்டங்களுக்கென மட்டுமே நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குளிர்பதன அரங்கத்துக்குள் அடங்கிவிடும் உரிமைக் கோரிக்கைகள், கல்வி நிறுவனங்களில், வேலைபார்க்கும் இடங்களில் புறக்கணிப்பு வெளிப்படையாகவே இருந்தது.
இப்போது எப்படி இருக்கிறது?
""மாவட்ட அளவில் தலைமை மருத்துவமனைகளில் ஒரேயொரு ஏஆர்டி மையம் இருந்த நிலை ஓரிரு மாதங்களுக்கு முன்னர்தான் இந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது.
திருச்சியில், இப்போது மணப்பாறை, முசிறி, உப்பிலியபுரம், புத்தாநத்தம், லால்குடி, துறையூர் ஆகிய 6 இடங்களிலும் இணை ஏஆர்டி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாதம் ஒரு நாள் 50 கி.மீ. தொலைவு வந்து மருந்து வாங்கிச் செல்லும் நிலை இப்போது இல்லை.
மேலும், எச்ஐவி தொற்றாளர்களுக்கு உருவாகும், சந்தர்ப்பவாத நோய்கள் என்று சொல்லப்படுபவைக்கும், ஏஆர்டி மையங்களிலேயே மருந்துகள் அளிக்கப்படுகின்றன'' என்கிறார் திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் ஏஆர்டி மருத்துவ அலுவலர் டாக்டர் டி. ராணி.
இந்த மாற்றம் வசதியாக இருப்பதை உறுதி செய்கிறார் துறையூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த எச்ஐவி தொற்றாளர்.
""அரசு டாக்டர்கள் மட்டுமன்றி, தனியார் மருத்துவமனையின் டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் விழிப்புணர்வுப் பயிற்சிகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், இப்போது கிராமப்புறத்திலுள்ள டாக்டர்களேகூட, புதிய தொற்றாளர்கள் குறித்து தொலைபேசியில் அழைத்து தகவல் சொல்லும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது'' என்கிறார் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் ஆற்றுப்படுத்துநர் சிந்துஜா.
""வெளியூரிலிருந்து வரும் பயணிகளுக்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும், ரயில்வே ஜங்ஷனிலும் தலா ஒரு "நம்பிக்கை மையம்' திறப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பரிலேயே இவற்றைத் திறந்துவிடுவோம்'' என்கிறார் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க மாவட்ட மேற்பார்வையாளர் ஆர். செல்வகுமார்.
""மருத்துவம் தவிர்த்து எச்ஐவி தொற்றாளர்களுக்கான சட்டப்பூர்வமான குறைகளைத் தீர்க்க இலவச சட்ட உதவி மையம் திருச்சி உள்பட 16 மாவட்டங்களில் நிறுவப்பட்டிருக்கிறது.
இங்கு ஒரு வழக்குரைஞர், ஒரு சமூகப் பணியாளர் இருக்கிறார்.
எந்த பிரச்னையானாலும் இந்த மையத்தை அணுகினால், இலவசமாகவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்'' என்கிறார் எச்ஐவியுடன் வாழ்வோர் கூட்டமைப்பின் தலைவி தமிழ்.
இன்னும்கூட இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும் செல்ல வேண்டியிருக்கிறது எனக் குறிப்பிடும் தமிழ், எச்ஐவி தொற்றாளர் என்ற அடிப்படையில் சலுகை கேட்கவில்லை; அனைவருக்கும் பொதுவான மனித உரிமைகளைத்தான் கேட்கிறோம் என்கிறார்.
போதிய உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, வேலையிலிருந்து நீக்குவது, குடியிருக்கும் வீட்டைக் காலி செய்யச் சொல்வது போன்ற புறக்கணிப்புகள் தொடரக் கூடாது என்பதே இவர்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.