முகப்பு
திருச்சி

ஆம்புலன்ஸ் சேவை போல விரைவாகக் கிடைக்குமா தீயணைப்புத் துறை சேவை?

துறையூர், ஆக. 13: தீயணைப்புத் துறை அவசர அழைப்பு எண் 101-ம், 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணைப் போல எங்கிருந்து அழைத்தாலும் விரைவாகக் கிடைக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:06 PM
பகிர்:

துறையூர், ஆக. 13: தீயணைப்புத் துறை அவசர அழைப்பு எண் 101-ம், 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணைப் போல எங்கிருந்து அழைத்தாலும் விரைவாகக் கிடைக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

   அண்மையில் துறையூர் அருகேயுள்ள கீரம்பூர் அருந்ததியர் தெருவில் திடீர் எனத் தீப்பிடித்தது.  இதில் 7 குடிசை வீடுகள்  சேதமடைந்தன.

   விபத்து குறித்த தகவலை தீயணைப்புத் துறைக்கு நேரடியாகத் தெரிவிக்க தெரியாமல் அப் பகுதி மக்கள் 108-க்கு தகவல் கூறியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அனுப்பி, தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர்.

   தமிழகத்தில் அவசர போலீஸ் உதவிக்கு 100-ம், தீயணைப்புத் துறைக்கு 101-ம், , போக்குவரத்து போலீஸ் உதவிக்கு 103-ம், குழந்தைகள் குறித்து உதவிக்கு 1098-ம், பெண்கள் குறித்த உதவிக்கு 1091 என்று பல எண்கள் அவசரத் தேவைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

   ஆனால், 100, 101 போன்ற அவசர உதவி எண்கள் மாவட்ட தலைநகரங்களிலும் இருந்தும், சில குறிப்பிட்ட நகரங்களிலும் இருந்தும் தொலைபேசியில் அழைத்தால் மட்டுமே இந்த அவசர உதவியைப் பெற முடியும் என்ற சூழ்நிலையே உள்ளது.

     தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், வடக்கு மண்டலத்தில் உள்ள 3 கோட்டங்களில் 29 நிலையங்களும், மத்திய மண்டலத்தில் 9 கோட்டங்களில் 84 நிலையங்களும், வட மேற்கு மண்டலத்தில் 4 கோட்டங்களில் 47 நிலையங்களும், தெற்கு மண்டலத்தில்  7 கோட்டங்களில் 70 நிலையங்களும், மேற்கு மண்டலத்தில் 7 கோட்டங்களில் 55 நிலையங்களும் என 285 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.

   இவற்றில் 101 என்ற அவசர அழைப்பு வசதி கோட்ட அலுவலகங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்ற நிலையங்களுக்கு அந்தந்தப் பகுதி தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சம்மந்தப்பட்ட கோட்ட அலுவலகத்திற்குள் வருகிற மற்றப் பகுதியினர் இந்த 101 சேவையைப் பெற தங்கள் கைபேசியில் அழைத்தால் அவை வேறு தீயணைப்பு நிலையங்களுக்குச் சென்று விடுகிறது.

   இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதவர்கள் தீயணைப்புத் துறையினரின் சேவையை எளிதில் பெற முடிவதில்லை.

    ஆனால், 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டி கைபேசி அல்லது தரைவழித் தொலைபேசி என எதிலிருந்து, எங்கிருந்து அழைத்தாலும் உரிய எல்லைக்குள்பட்ட ஆம்புலன்ஸ் விரைவாகக் கிடைக்கிறது.

   ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கே இப்படி ஒரு வசதி சாத்தியப்படும் போது, 285 தீயணைப்பு நிலையங்களுக்கு 101 சேவையை கைபேசியில் அல்லது தொலைபேசியில் எதிலிருந்து, எங்கிருந்து அழைத்தாலும் சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலையத்தினரின் விரைவான சேவைக்கு வித்திடுவது சாத்தியமான ஒன்றுதான். அதற்கான தொழில்நுட்பங்களும், கட்டமைப்புகளும் அரசிடம் உள்ளன.

   எனவே, 101 எண்ணை எந்தப் பகுதி மக்களும் எளிமையாகப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினரின் சேவையை எளிதில் பெறுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →