திருச்சி

மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனைக் கட்டடம் பயன்பாட்டுக்கு வருமா?

மயிலாடுதுறை, ஆக. 17: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் ரூ. 1.99 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு, 7 மாதங்களாக பூட்டியே கிடக்கும் அறுவைச் சிகிச்சை பிரிவுக்கான கட்டடத்

அ. அன்புமணி

மயிலாடுதுறை, ஆக. 17: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் ரூ. 1.99 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு, 7 மாதங்களாக பூட்டியே கிடக்கும் அறுவைச் சிகிச்சை பிரிவுக்கான கட்டடத்தை விரைவில் திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று நோயாளிகளும், அந்தப் பகுதி மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனை மாவட்டத்தின் 2-வது பெரிய அரசு மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனையின் மூலம் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சராசரியாக நாளொன்றுக்கு 1000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள், வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதி, மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையளிக்க முடியாமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது என்று பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

இதையடுத்து, மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ், சுமார் ரூ. 1.99 கோடியில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்-ரே, ஸ்கேன், 60 படுக்கையறைகள் கொண்ட அடுக்கு மாடிக் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இதைத்தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்திலிருந்த பழைய கட்டடங்கள் இடித்து, அப்புறப்படுத்தப்பட்டு, அதே இடத்தில் புதிய கட்டடங்கள் கட்டும் பணி 1.1.2009-ல் தொடங்கப்பட்டு, 31.1.2010-ல் முடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

கட்டி முடிக்கப்பட்டு, சுமார் 7 மாதங்களாகக் கட்டடம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. மருத்துவமனையில் கழிவறை, படுக்கையறை, மின் விளக்குகள், காற்றோட்ட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில், புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்தப் பகுதி அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளின் சுய நலத்தின் காரணமாகவே அந்தக் கட்டடங்கள் திறக்கப்படவில்லை என ஒரு சாரரும், தமிழக துணை முதல்வர்தான் இதைத் திறக்க வேண்டும் என்று கூறப்படுவதாலேயே கட்டடங்கள் திறக்கப்படவில்லை என்று மற்றொரு சாரரும் தெரிவிக்கின்றனர்.

மக்கள் பிரதிநிதிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததே கட்டடத் திறப்பு தாமதத்துக்கு உண்மையான காரணம் என்கின்றனர் இந்தப் பகுதி திமுகவினர்.

அரசியல்வாதிகளிடையே உருவாகியுள்ள பிரச்னையின் காரணமாக, பொதுமக்களின் நலன் பின்னுக்கு தள்ளப்படுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல; மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றித் தந்தபோதிலும், அதைப் பயன்பாட்டு கொண்டுவராமல் இழுத்தடிக்கும் நிலையைக் கைவிட வேண்டும். பொதுமக்கள், நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய கட்டடங்களை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

SCROLL FOR NEXT