திருச்சி

கொடிங்கால் ஆற்றுப் பாலம் சீரமைக்கப்படுமா?

திருச்சி, ஆக. 22: மக்கள் நடந்துச் செல்ல முடியாத அளவுக்கு மோசமான நிலையில் காட்சியளிக்கும் கொடிங்கால் ஆற்று இணைப்புப் பாலத்தைப் புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி கிராம மக்கள

தி. இன்பராஜ்

திருச்சி, ஆக. 22: மக்கள் நடந்துச் செல்ல முடியாத அளவுக்கு மோசமான நிலையில் காட்சியளிக்கும் கொடிங்கால் ஆற்று இணைப்புப் பாலத்தைப் புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பேரூர்- மேக்குடி கிராமங்களுக்கு இடையே கொடிங்கால் ஆற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப் பணித் துறையினரால் இணைப்புப் பாலம் கட்டப்பட்டது.

  கடந்த 1977-ம் ஆண்டு இந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்  ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதோடு வீடுகளையும் இழந்தனர். இதையடுத்து, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

  எம்.ஜி.ஆர். வேண்டுகோளின்படி, பெல் நிறுவனம் சார்பில் ஏறத்தாழ 300 குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. மேலும், அவர்கள் வழங்கிய நிதியுதவியைக் கொண்டு, பொதுப் பணித் துறை சார்பில் கொடிங்கால் ஆற்றின் குறுக்கே 200 அடி நீளத்துக்கு இணைப்புப் பாலம் கட்டப்பட்டது.

  இந்தப் பாலம் கட்டப்பட்டப் பிறகே மேக்குடி, கீழ்பத்து, சுபையபுரம், பிச்சுவரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 2,500 குடும்பத்தினர் பேரூர் வழியாக திருச்சி, குழுமணி, குமார வயலூர், அயிலாப்பேட்டை போன்ற முக்கிய பகுதிகளுக்கு சென்று வர உதவியாக இருந்தது. பாலம் இல்லையெனில், திருச்சிக்குச் செல்ல ஏறத்தாழ 14 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும்.

  தடுப்புக் கம்பிகள் இல்லாமல் பாலம் மொட்டையாக காணப்பட்டதையடுத்து,  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து பாலத்தின் இருபுறமும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன. ஆனால், அவை சில மாதங்களிலேயே உடைந்துவிட்டன.

  இந்தப் பாலத்தின் தற்போதைய நிலையோ மிகவும் மோசம். மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வகையில், பாலம் சிதிலமடைந்து உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருகிறது.

  பாலத்தை தாங்கி நின்ற இரண்டு தூண்கள் திடீரென பூமிக்குள் இறங்கியதால் மையப் பகுதி "ஸ்' வடிவில் காட்சியளிக்கிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் இந்தப் பாலத்தை கடக்க முடியாமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

  இந்தப் பாலத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேரூர், மேக்குடி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமும் பலமுறை மனுக்கள் கொடுத்திருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  பாலத்தைச் சீரமைக்கவோ அல்லது புதிய பாலம் கட்டவோ யார் நிதி ஒதுக்குவது என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதாகவும், இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர எந்த அதிகாரிகளும் முயற்சிக்க மறுப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  பழுதடைந்திருப்பினும் வேறு வழியில்லாமல் பாலத்தை கடந்துச் செல்லும் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 06-05-2010 அன்று மேக்குடி கீழ்பத்து கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகள் கயல்விழி சைக்கிளில் சென்ற போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். அவர் இன்னும் முழுமையாகக் குணமாகாமல் உள்ளார்.

  இதையடுத்து, கிராம மக்கள் பேரூரில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர். 15 நாள்களுக்குள் பாலம் தொடர்பாக ஆவணங்களைத் தேடி கண்டுபிடித்து திட்ட மதிப்பீடு செய்து, பாலத்தைச் சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என அப்போது அதிகாரிகள் உறுதியளித்தனர்.

  இதேபோல, குழுமணியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் | இரண்டரை கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

  ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே அந்தப் பகுதி மக்களின் குற்றச்சாட்டு. புதிய பாலம் கட்டுவது குறித்து ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.  இந்த பிரச்னை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் வட்டச் செயலர் பேரூர் ப. நடராஜன் கூறியது:

   "புதிய பாலம் கட்டுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் மனு கொடுத்துவிட்டோம். இதுவரை ஆக்கப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை. போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.   கொடிங்கால் ஆற்றில் பாலத்தையொட்டி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால்தான் தூண்கள் பூமிக்கடியில் செல்லும் நிலை ஏற்பட்டது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் இன்னும் வேகமாக இருக்கும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT