திருச்சி

மயிலாடுதுறை வரதாச்சாரியர் பூங்கா சீரமைக்கப்படுமா?

மயிலாடுதுறை, ஆக. 24: நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள டாக்டர் வரதாச்சாரியர் பூங்காவை உரிய முறையில் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள்

அ. அன்புமணி

மயிலாடுதுறை, ஆக. 24: நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள டாக்டர் வரதாச்சாரியர் பூங்காவை உரிய முறையில் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

      1951-ம் ஆண்டு சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சுதந்திரப் பூங்கா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவுக்கென தனிச் சிறப்பும், வரலாறும் உண்டு.

     பூங்கா உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களும் இங்குதான் நடைபெறுமாம். மேலும், இங்கு நடைபெற்ற கூட்டங்களில் பெரியார், காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர் என்று நினைவுகூர்கின்றனர் இந்தப் பகுதி முதியவர்கள்.

     இந்த சுதந்திரப் பூங்காவில் ஒரு சில தலைவர்களின் சிலைகள் மட்டுமே இருந்ததாலும், பொதுமக்கள் அமரத்  தேவையான இருக்கைகள், குடிநீர் வசதி, பொழுதுப்போக்கு அம்சங்கள் இல்லாததால் உரிய பராமரிப்பின்றி இருந்து வந்தது.

     இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ கிட்டப்பா மேற்கொண்ட முயற்சியாலும், நகர்மன்ற நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பினாலும் 1960-களின் நிறைவில் பூங்காவில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.    அதோடு, 1952 - 1959 வரையில் நகர்மன்றத் தலைவராக இருந்த டாக்டர் வி. வரதாச்சாரியரின் நினைவைப் போற்றும் வகையில், சுதந்திரப் பூங்கா, டாக்டர் வரதாச்சாரியர் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.  

     இதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகமே இந்தப் பூங்காவை சிறப்பான முறையில் பராமரித்து வந்தது.     இந்நிலையில்தான், மயிலாடுதுறை மக்களின் குடிநீர்ப் பிரச்னையை போக்கும் வகையில், 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி வரதாச்சாரியர் பூங்காவில் அமைக்கப்பட்டது. இதனால், கம்பி வேலிகளால் பூங்கா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மீதமுள்ள இடத்தில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

      இதைத் தொடர்ந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், அவற்றின் உதிரிப் பாகங்கள் களவாடப்பட்டன. இதனால், பூங்காவுக்கு பூட்டு போடப்பட்டு, பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

      பயன்பாடின்றி இருப்பதால் பூங்காவினுள் சமூக விரோதச் செயல்கள் புரிய ஏதுவாக உள்ளது. பழையபடி, பூங்காவைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர அங்கு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

      நிதிப் பற்றாக்குறை என்று கூறி, கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது.

      இதனிடையே, பூங்காவை அண்மையில் ஆய்வு செய்த தொகுதி எம்எல்ஏ எஸ். ராஜகுமார், விரைவில் பூங்கா சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், இதுவரையில் நடவடிக்கை இல்லை என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

     இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு)  வாசுதேவன் கூறியது:

     வரதாச்சாரியர் பூங்காவைச் சீரமைக்க ரூ. 40 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால், மயிலாடுதுறையில் உள்ள வங்கிகளிடமும், நகர விரிவாகத்துக்கு அரசு மூலம் கிடைக்கும் நிதி ஆதாரங்களைப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

     பூங்கா சீரமைப்புக்கு சில வங்கிகள் நிதி அளிக்க முன்வந்துள்ளபோதிலும், அந்த நிதி போதிய அளவில் இல்லை. இதனால், சீரமைப்புப் பணி தாமதமாகி வருகிறது என்றார்.

    நகராட்சிக்குச் சொந்தமான வாகனங்களை பூங்காவில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூங்கா சீரமைப்புக்குத்  தேவையான நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

     மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு இடங்கள் இல்லாததால், பொதுமக்கள், குழந்தைகளின் நலன் கருதி பூங்காவை விரைவில் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மயிலாடுதுறை பகுதி மக்களின் வலியுறுத்தலாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT