திருச்சி

தொடர் கொள்ளை:​ அச்சத்தில் மாநகர மக்கள்

திருச்சி பிப். 9: திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வழிப்பறி, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, திரும

தி. இன்பராஜ்

திருச்சி பிப். 9: திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் வழிப்பறி, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, திருமண மண்டபங்களில் திருட்டு, பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு, பேருந்தில் செல்வோரிடம் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக, கருமண்டபம், பொன்மலை, ஸ்ரீரங்கம், உறையூர், கோட்டை, கே.கே. நகர், தில்லைநகர் பகுதிகளில் குற்றச் சம்பவங்களுக்குக் குறைவில்லை என்றே கூறலாம்.

கடந்த 1-ம் தேதி தில்லைநகரில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கி ரூ. 5.50 லட்சம் பறிப்பு, பிப். 2-ம் தேதி இரவு கோட்டை பகுதியில் வியாபாரி மீது மிளகாய்ப் பொடித் தூவி ரூ. 70,000 பறிப்பு ஆகிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதேபோல, 2-ம் தேதி கருமண்டபம் பொன்னகர் பகுதியில் மளிகை வியாபாரியின் வீட்டில் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

பிப். 5-ம் தேதி மேல கல்கண்டார்கோட்டையில் வீட்டில் இருந்த பெண்ணிடம் முகவரி கேட்பதுபோல நடித்து, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் 24 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர்.

இந்நிலையில், திருவானைக்காவலில் திங்கள்கிழமை இரவு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இவையெல்லாம், வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் மட்டுமே!. குற்றங்கள் நடைபெற்று வழக்குகள் பதிவு செய்யப்படாத சம்பவங்கள் ஏராளம். இருப்பினும், இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை குற்றவாளிகள் யாரையும் போலீஸôர் கைது செய்யவில்லை. ஆனால், மாநகரில் வாகனச் சோதனை நடத்துவதை மட்டும் சற்றுக்கூட கைவிட்டதாகத் தெரியவில்லை. கடந்த 8 நாள்களில் மட்டும் வாகனச் சோதனையின் மூலம் ரூ. 12 லட்சம் வசூலித்து சாதனை படைத்துள்ளனர் மாநகர போலீஸôர்.

கடந்த 2008-ம் ஆண்டில் வாகனச் சோதனை மூலம் வசூலான தொகை ரூ. ஒரு கோடியே 13 லட்சம். ஆனால், 2009-ல் ரூ. 2,36,29,900 வசூலித்து அபார சாதனைப் படைத்துள்ளனர்.

திருச்சி மாநகரக் காவல் ஆணையாராக கருணாசாகர் பொறுப்பேற்ற கடந்த ஆண்டு, ஜூலை 9-ம் தேதிக்குப் பிறகு வசூலிக்கப்பட்ட தொகை ரூ. ஒன்றரைக் கோடிக்கும் அதிகம். கடந்த மாதம் மட்டும் ரூ. 36,61,950 வசூலித்துள்ளனர்.

போலீஸôர் வாகனச் சோதனையில் காட்டும் ஆர்வத்தில் பாதியளவாவது ரோந்துப் பணியில் காட்டியிருந்தால் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களைத் தடுத்து இருக்கலாம்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

திருச்சி மாநகரை பொருத்தமட்டில் தினமும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது

வாடிக்கையாகிவிட்டது. ஆனால், காவல் துறை உயர் அதிகாரிகளோ மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், திருச்சியில் குற்றச் சம்பவங்கள் குறைவு எனப் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.

உயர் அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டுமே என்ற எண்ணத்தில், சில காவல் நிலையங்களில் அதிகாரிகள் உண்மையை மறைத்துவிட்டு வழக்குப் பதிவு செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், குற்றப் பிரிவு காவல் நிலையங்களில் நிலவும் ஆள் பற்றாக்குறையும் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

பெரும்பாலான நாள்களில் குற்றப் பிரிவு காவலர்கள் வாகனச் சோதனைக்காகப் பயன்படுத்தப்படுகின்றனர்.

திருச்சி மாநகரில் உள்ள 12 காவல் நிலையங்களில் குற்றப் பிரிவுக்கென 7 தனி காவல் நிலையங்கள் உள்ளன. கன்டோன்மென்ட், கோட்டை, பொன்மலை, உறையூர், கே.கே. நகர், ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட் ஆகிய குற்றப் பிரிவு காவல் நிலையங்களில் தேவைக்கேற்ப காவலர்கள் இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களில் சிலர் சிறப்புப் பாதுகாப்பு என்ற பெயரில் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுகின்றனர். சிலரோ, வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்துக்குச் சென்றுவரவே நேரம் சரியாக உள்ளது என்கின்றனர்.

வாகனச் சோதனையில் ஈடுபட்டு அபராதம் வசூலிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டும் போலீஸôர் குற்றத் தடுப்புச் செயல்களிலும், குற்றவாளிகளைப் பிடிப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT